கிளிநொச்சியில் தரப்பால் கூடாரத்திற்குள் உறங்கிய சிறுவனை பாம்பு கடித்ததில் மரணமடைந்துள்ளார்

கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த 10 வயதுடைய ஞானசீலன் நிலக்ஷன் ரொபேட் என்ற சிறுவன் தரப்பால் கூடாரத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்த போது விஷப் பாம்பு கடித்ததில் மரணமடைந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை இரவு சிறுவன் ஆழந்த உறக்கத்தில் இருந்த பொழுது பாம்பு தீண்டியுள்ளது. பாம்பு தீண்டியதை அறியாத நிலையில் அதிகாலை வேளை சிறுவன் வயிற்று நோவால் துடித்துள்ளார்.

இதனையடுத்து மயக்கம் அடைந்த சிறுவனை அதிகாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பெற்றோர் அவசரமாக கொண்டு சென்றனர். சிறுவன் மரணடைந்திரு;கலாம் என்று எண்ணிய வைத்தியர்கள் சிறுவனின் உடலில் சிறு அசைவுகளை அவதானித்தனர்.

இதனையடுத்து அம்புலன்ஸ் வண்டி ஊடாக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொழுதும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முந்தினம் மரணமானார். இவர் புனித பற்றிமா பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்தார். கடந்த 22ஆம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையிலும் தோற்றியிருந்தார்.

அண்மையில் மீள்குடியேறிய கிளிநொச்சியின்  பல பகுதிகளில்; இவ்வாறான பாம்புக்கடியால் மக்கள் பெரும் பீதியடைந்திருப்பதாக குறிப்பிட்ட செய்தியாளர் ஒழுங்காக துப்புரவாக்கப்படாத, மிதிவெடிகளும் பாம்புகளும் நிறைந்த பாதுகாப்பற்ற சூழலில் பல குழந்தைகள் சிறுவர்கள் இருப்பதை பார்த்தாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை இதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருச்செல்வம் குகப்பிரியா  என்பவர் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.