நியூயோர்க் பயணமாகிறார் மகிந்தா! – எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறலாம் என அச்சம்!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அடுத்த மாதம் நியூயோர்க் விஜயம் செய்யவுள்ளார்.

இவர் நியூயோர்க் செல்லும் வேளையில் அவருக்கு எதிராக எவரும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அங்குள்ள தமது தூதரகங்களுக்கு சிறிலங்காவின் வெளிவவிகார அமைச்சு அறித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று அடுத்த மாதம் நியூயோர்க் செல்லவுள்ளது.

இக் குழுவில் இடம்பெறுகின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் சிறிலங்காவில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தின் பின்னர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக மெக்சிக்கோவுக்கும், ஜேர்மனிக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் 22ஆம் திகதி உரையாற்றவுள்ளார். மூன்று நாள் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் சுமார் 150 உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இக் கூட்டத்தின் முதலாவது நாள் பிரேசில், அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, மலாவி, பாக்கிஸ்தான் மற்றும் கோஸ்ராறிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு அடுத்ததாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  உரையாற்றவுள்ளார்.

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்தும், இப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு தொடர்பாகவும் அவர் தனதுரையில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நியூயோர்க் பயணத்தின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இதனையடுத்து, பாதுகாப்பு நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறும், நியூயோர்க்கிலுள்ள பௌத்த விகாரைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செல்லும் போது குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி வழங்குமாறும் அமெரிக்காவில் உள்ள தமது தூதரகத்தை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.