30.08.2010: லண்டனில் “உறங்கும் உண்மைகள்” போர் அழிவு கண்காட்சி

“உறங்கும் உண்மைகள்” போர் அழிவு கண்காட்சி ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது. லண்டன் மிச்சம் பாக்கில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தமிழர்கள் மேல் சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்டுவந்த தமிழின அழிப்பு, அடக்கு முறைகள், போர் அவலங்கள் போன்ற பல சம்பவங்கள் உண்மையின் சாட்சிகளாய் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

குறிப்பாக கடந்த ஆண்டு சிறீலங்கா அரசு தமிழர் தாயகத்தில் நடாத்திய கொடூர யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள், பாடசாலை சிறுவர்கள், மற்றும் அழிக்கப்பட்ட வைத்திய சாலைகள், தமிழர் சொத்துக்கள், என்பனவும், போரின் பின் தொடரும் படுகொலைகளையும் சித்தரிக்கும் இந்த கண்காட்சியில் அதிகளவான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாயகத்தில் மக்களுக்கும், தாயக வளர்ச்சிக்கும் கடந்த 14 வருடங்களாக பல வழிகளிலும் உதவிசெய்துவரும் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினால் வருடம் தோறும் தாயகத்திற்கு உதவுவதற்கென நடாத்தப்படும் ரதோற்சவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உட்பட பல்லின மக்களும் கலந்துகொள்வதால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையின் சாட்சிகளாய் உறங்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவரவே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கண்காட்சியில் அனைத்து மக்களையும் வந்து கலந்து கொள்ளுமாறும், இக்கண்காட்சியை பார்த்து அவற்றிற்கு உயிர் கொடுக்கும் வகையில் வேற்றின மக்களுக்கும் எம் தாயக மண்ணில் உறங்கும் உண்மைகளை எடுத்துரைத்து தாயகத்தில் முடங்கி அடிமைகளாய், அனாதைகளாய், கைதிகளாய் இருக்கும் எம் உறவுகளுக்கு அவர்களின் ஆதரவை பெற முயற்சிக்கும் படியும் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்காட்சி நடைபெறும் திகதி: 30-08-2010 திங்கள் கிழமை (வங்கி விடுமுறை)

கண்காட்சி நடைபெறும் நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை

கண்காட்சி நடைபெறும் இடம்: FIGGES MARSH FIELD, LONDON ROAD, SW17

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.