ஐ.தே.கவின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு!

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக முடிவு எடுப்பதாயின் அதுபற்றிய நிலைப்பாட்டையும் யோசனைத் திட்டங்களையும் அரசாங்கம் எழுத்து மூலம் சமர்ப்பிக்கும் வரை தாங்கள் காத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கும் அதேநேரம், எழுத்து மூலம் சமர்ப்பிக்க ஒன்றுமில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சில சுற்றுப்பேச்சுகளை நடத்தியிருந்தார். அதன் இறுதிப் பேச்சு கடந்த 23 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்றிருந்தது.

இதில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க. குழுவினர் கலந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் இதில் பங்கு பற்றியிருந்தார்.

இதன்போது, அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய விபரங்களை அரசாங்கத்திடம் ஐ.தே.க. எழுத்து மூலம் கேட்டிருந்தது.

அது மட்டுமல்லாது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடும் யோசனைத் திட்டமும் எழுத்து மூலம் கிடைக்கும் வரை அரசாங்கத்துடனான பேச்சுகள் இடைநிறுத்தி வைக்கப்படுவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.யும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படப்போவதாகக் கூறப்படும் அரசியலமைப்புத் திருத்தம் பற்றி ஐ.தே.க. ஏதேனும் தீர்மானம் எடுத்துள்ளதா என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக எம்.பி.யிடம் கேட்டபோது, அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய விபரங்கள் எழுத்து மூலம் கிடைக்கும் வரை அது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்க முடியாதென்றும் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார்.

இதேநேரம், அரசியலமைப்புத் திருத்தம் பற்றி ஐ.தே.க.வுக்கு ஏதேனும் எழுத்து மூலம் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதா என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்தவிடம் கேட்டபோது;

“இனி எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்கு ஒன்றுமில்லை. பேச்சுகளின் போது அவர்களுக்கு விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டு விட்டன.

அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சட்டமூலம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இனி அது பற்றி பேச முடியும் என்று கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.