பசிலின் இந்திய வருகையும், இந்திய அரசின் திரை மறைப்பும்!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த 24 ஆம் தேதியன்று பசில் இந்தியாவுக்கு புறப்பட்டபோது, அவருடன், இலங்கை அதிபர் ராஜபக்சவின் இன்னொரு சகோதரரும், பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கே ஆகியோரும் உடன் வருவதாக இருந்தது.

இந்நிலையில் கடைசி நிமிட மாற்றத்தினால், (அதில் என்ன மர்மமோ?!) கோத்தபாய பயணம் ரத்தானது.

வழக்கமாக அண்டை நாடுகளிலிருந்து ஒரு அமைச்சரோ அல்லது அதிகாரியோ இந்தியாவுக்கு வருகை தந்தால் அது குறித்தும், அவர்களது பயண நோக்கம், செய்துகொள்ளப்பட இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் விவாதிக்கப்பட இருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்களை இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், ஊடகங்களுடன் ஆர்ப்பாட்டமாக பகிர்ந்துகொள்ளும்.

அல்லது குறைந்தபட்சம் அதிகாரிகளையாவது தகவல் கொடுக்கச் செய்து “வட்டாரங்கள் தெரிவித்தன” என்ற ரீதியிலேனும் ஊடகங்களில் அது குறித்து செய்திகளை வரவழைத்துவிடும்.

ஆனால் பசில் வருகையில் அதுபோன்ற எந்தவிதமான அறிவிப்புகளோ அல்லது செய்திகளோ இந்திய அயலுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

மாறாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அந்நாட்டு தூதரகம் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்திய ஊடகங்களில் பசில் வருகை குறித்த செய்தி இடம் பெற்றது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவது, இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாமல் இருப்பது, தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவது, வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் தமிழர்களது விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, சிங்கள குடியேற்றம் அரங்கேறி வருவது என இலங்கை அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்க, இது குறித்து நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் அண்மையில் குரல் எழுப்பி, மத்திய அரசை தலையிட வலியுறுத்தினர்.

மத்திய அரசு தரப்பிலும் இது குறித்து இலங்கையுடன் விவாதிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

அப்படி அளிக்கப்பட்ட உறுதி உண்மையாக இருந்திருக்குமானால், இந்திய அயலுறவுத் துறை அமைச்சகமோ அல்லது அரசின் தலைமையோ என்ன செய்து இருக்கவேண்டும்?

இலங்கையிலிருந்து பசில் உள்ளிட்டவர்கள் வர உள்ளனர்.அவர்களிடம் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு – குறைந்தபட்சம் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையாவது – முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்க வேண்டும்.

அதற்கு மனம் இடம் கொடுத்திருக்கவில்லை என்றால், அதிகாரிகளையாவது தகவல் கொடுக்கச் செய்து ” வட்டாரங்கள் தெரிவித்தன” என்ற ரீதியிலேனும் பசிலுடன் விவாதிக்க இருக்கும் விடயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய அறிவிப்பு ஏதும் வரவில்லை.மாறாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம்தான் பசில் அண்ட் கோ, டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்தது என்பது குறித்து ஒரு நீண்ட அறிக்கையை ஊடகங்களுக்கு தந்தது.

அதில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வேளாண் துறை அமைச்சர் ஷரத் பவார் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா உள்ளிடோர்களையும், இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரையும் சந்தித்துப் பேசியதாக தெரிவிக்கபட்டிருந்தது.

இதில் அமைச்சர்களுடனான சந்திப்பின்போது போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், மீள் குடியேற்றம் உள்ளிட்டவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பசில் விளக்கியதாக தெரிவிக்கபட்டிருந்தது.

அத்துடன் வட மாகாண முன்னேற்றத்திற்கு இந்தியா ஆற்றி வரும் உதவிகளுக்கு பசில் நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் வேளாண் துறையில் இந்தியா அளிக்க உள்ள உதவிகளையும் பட்டியலிட்டிருந்த அந்த அறிக்கை,சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இத்தகவல் இலங்கை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டவை.  ( இந்தியா தரப்பில் எந்த ஒரு அமைச்சகமும் இதைக்கூட அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது வேறு கதை! )

ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதது, இரு நாடுகளும் செய்து கொள்ள இருக்கும் இராணுவ ஒப்பந்தங்கள் பற்றியதுதான்!

ஏற்கனவே புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கைக்கு ஆயுதங்களையும், போர் வியூகங்களையும் அளித்ததாக புகார் எழுந்தபோது அதனை மறுத்த இந்திய அரசு, தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்கியதாக மழுப்பியிருந்தது.

அதே சமயம் எரிகுண்டுகள் போன்ற கொடூர ஆயுதங்களை சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்த வாங்கியிருந்த இலங்கை, இனிமேலும் ஆயுதங்களுக்காக தமது பகை நாடுகளுடன் நெருக்கம் காட்டக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தத்தை செய்து கொள்ள இருக்கிறது இந்தியா!

இதற்காக விரைவில் ராஜபக்ச இந்தியா வர உள்ள நிலையில், மேற்கூறிய ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்துதான் பசிலின் இந்த பயணத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப் குமார் ஆகியோருடன் நடந்த தனி சந்திப்பின்போதுதான் பசில் அண்ட் கோ இதனை விவாதித்துள்ளது.

நிலைமை இப்படி இருக்கையில், பசிலுடன் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இந்திய அரசு தரப்பு எதுவுமே தெரிவிக்காமல் மறைப்பது அல்லது மவுனம் சாதிப்பது ஏன்?

இதில் தமிழர் நலன் ஏதும் இல்லை அல்லது தமிழர்களுக்கு எதிரான ஏதோ ஒன்று உள்ளது என்பதாலா?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.