“வலயம் – நான்கு” இடம்பெயர் மக்களுக்கு இராணுவத்தினர் மிரட்டல்!

செட்டிகுளம் வலயம் நான்கு நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இராணுவத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள வலயம் நான்கு நலன்புரி நிலையத்தில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் குறித்த கிராம மக்களை அங்கிருந்து வெளியேறி கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்குமாறு இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் ஏழாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் “எம்மை எமது வீடுகளிற்குச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் பறவாய் இல்லை. எமது ஊர்களில் உள்ள பாடசாலைகளிலாவது தங்கவையுங்கள். மீண்டுமொரு முகாமிற்கு நாங்கள் இடம்பெயரத் தயார் இல்லை” என வலியுறித்தித் தெரிவித்தனர்.

இதனை அடுத்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையினை இடைநிறுத்தியிருந்த இராணுவத்தினர் இன்று முற்பகல் மக்களை அழைத்து நாளை பத்து மணிக்கு முன்னர் வெளியேறவேண்டும் என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேவேளை மக்களின் பிரதிநிதிகள் இராணுவத்தினரை நாடி இந் நடவடிக்கையினைக் கைவிடுமாறு கேட்ட போது தமக்கு மேலிடத்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தம்மால் மேற்கொண்டு எதனையும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் வலயம் நான்கில் வசதிகள் அற்ற நிலையில் வாழ்கின்ற மக்களைப் பார்வையிடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திடீர் மாற்றம் என பெயர் குறிப்பிடவிரும்பாத இராணுவப் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.