விடுதலைப் புலிகளை தோற்கடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் ‐ இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என இராணுவம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் எவ்வாறு யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை சார்க் பிராந்திய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னியில் இடம்பெற்ற மிகவும் பாரிய கூட்டுப்படைச் சமர்களுக்கு லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமை வகித்திருந்திமை குறிப்பிடத்தக்கது.
 
யுத்தம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாகவும், சார்க் பிராந்திய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கையின் அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
 
மின்னேரியா பிரதேசத்தில் இராணுவ நினைத்தூபி ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர் பாதுகாப்பு அதிகாரிகள் குழாம் விரைவில் யுத்த வலயங்களுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யுத்தம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.