சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!

வன்னிப் போரின் போது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை காலதாமதம் இன்றி நேர்மையுடன் முன்னெடுக்க வேண்டுகின்றோம்.

போரின் இறுதி நாட்களில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய ‘போர்க்கைதிகள்’ என்ற வரையறைக்குள் பராமரிக்கவும், அதற்குள்ளான உரிமைகளை வழங்கவும் வேண்டுகின்றோம்.

சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளதால், சிறிலங்கா அரசை சர்வதேசம் உன்னிப்பாக கண்காணித்து மனித உரிமைகளை முழுமையாக பேணும் வரை அவ்வரசைப் புறக்கணிக்க ஆவன செய்யுமாறு வேண்டுகின்றோம்.

இவ்வாறு நாடுகடந்த அரசாங்கத்தின் போராளிகள், மாவீரர்கள் குடும்ப நலன்பேணல் குழுவின் ஒருங்கு கூட்டுனர் திரு உருத்திராபதி சேகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் முழுமையான வடிவத்தை இங்கே தருகின்றோம்.

அன்பானவர்களே!, உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழை தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனத்தவர்கள் நாம். இலங்கையின் வடக்கு, கிழக்கு பாரம்பரிய நிலத்தை எமது தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழ் இனத்தவர்கள் நாம்.

உலகில் வரையறை செய்யப்பட்ட சுயநிர்ணய உரிமையை முழுமையாக பெற்றவர்களும், அதை மிகச்சிறிய அளவிலேனும் செயற்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாதவர்களும் நாம் தான். எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சென்ற வருடத்தில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் மிகமோசமாக அழிக்கப்பட்ட பொழுதினில் நிகழ்ந்த இனப்படுகொலையையும், இன்று வரை தொடரும் இனச்சுத்திகரிப்புகளையும் நீங்கள் அறிவீர்கள்.

சென்ற வருடத்தில் யுத்தம் மிகஉச்சத்தில் இருந்த பொழுதில் பாதுகாப்பு பிரதேசங்கள் என்று சிறிலங்கா அரசாங்கமே பிரகடனம் செய்த பகுதிகளில் தஞ்சம் புகுந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு செறிவான தாக்குதல்களை நடாத்தி எமது மக்களை கொன்று குவித்த சிறிலங்காவின் படைகள் மிகமோசமான மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் எமது தேசிய இனத்தின் மீது நிகழ்த்தி இருக்கிறார்கள்.

அந்த இறுதி நாட்களில் 50,000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டதையும் உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இது நிகழ்ந்து ஒருவருடத்துக்கும் மேலாகிய பொழுதிலும் இந்த மானுட விரோத செயலை செய்தவர்களும், அதற்கு உத்தரவு வழங்கியவர்களும் இன்னும் நீதியின் முன்நிறுத்தப்படாதது மட்டுமல்ல, அவர்கள் இன்று வரையும் இலங்கையில் தமிழ் தேசிய இனத்தின் அனைத்து இருப்புகளையும் சிதைக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் இருப்பதும் வேதனைக்குரியது.
இந் நிலையில் கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி இலண்டனில் இருந்து சிவந்தன் என்ற தமிழ் இளைஞன் மறுக்கப்பட்ட நீதியைத் தேடி கால்நடையாக ஐ.நாவின் ஜெனீவா செயலகத்தை நோக்கி நடந்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமான சாலைகளில் மேடும், பள்ளமுமான வீதிகளில் மழையிலும், கடும் வெயிலிலும் அந்த இளைஞன் தொடர்ந்து நடந்த பொழுதில் அந்தப் பிரதேசத்து தமிழ் மக்களும், ஐரோப்பிய மக்களும் திரண்டு தமது ஆதரவை அவருக்கு கொடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜெனீவா ஐ.நா முன்றலில் கூடும் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியில் தனது கோரிக்கைகளை அந்த இளைஞன் ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கின்றார்.

அந்த இளைஞனின் குரலுடன் எமது கோரிக்கைகளும் இணைந்து நாமும் எமது வேண்டுகோளை உலகின் பொதுவான அமைப்புகளுக்கும், நாடுகளின் தூதரகங்களுக்கும், மானிட உரிமை மற்றும் சுதந்திரத்துக்கான அமைப்புகளின் முன்னிலையில் வைக்கின்றோம்.

அன்பானவர்களே!, ஆயிரக்கணக்கான மைல் தூரம் நடந்து வந்து உலக பொது அமைப்பான ஐ.நாவின் முன்பாக

  • தமிழ்த் தேசிய இனத்தின் மக்கள் மீதான சிங்களத்தின் போர்க்குற்றங்கள் சுயாதீன முறையில் விசாரிக்கப்படவேண்டும்.
  • தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்களும், போராளிகளும் நிபந்தனை இன்றி விடுவிக்கப்படவேண்டும்.
  • மனித உரிமைகளை முழுமையாக பேணும்வரை சிறிலங்கா அரசை சர்வதேசம் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை கையளித்துள்ளார்.

சர்வதேச உரிமை பிரகடனங்களின் மூலம் அவர் இத்தகைய கோரிக்கைகளை விடுவதற்கு அனைத்து உரிமையும் உள்ள ஒரு பொதுமகன் என்பதை ஏற்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். ஒரு தேசிய இனமும் அதன் மக்களும் தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் சூழல் எதிர்காலத்தில் மிகப்பெரிய எதிர்விளைவுகளை அந்த பிரதேசங்களில் ஏற்படுத்தும் என்பதை கடந்த பல நாட்டு வரலாறுகளில் இருந்து அறிவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். இப்போது ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்துள்ள இளைஞன் எமது இனத்தின் வருங்கால மனிதர்களில் ஒருவர். இவரைப் போன்ற பல இலட்சம் இளைஞர்கள் இருக்கின்றார்கள். எமது வருங்கால தலைமுறையினருக்கு இன்னமும் உலகில் மனிதநேயமும், நீதியும் இருக்கின்றது என்பதை நிரூபணம் செய்தாக வேண்டிய கடமை சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.

அதற்காகவேனும் சர்வதேச அமைப்புகள் இதில் தமது கவனத்தை முழுமையாகவும் நேர்மையாகவும் செலுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளதை அன்புடன் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

எனவே, போர்க்குற்ற விசாரணையை எந்தவித தாமதமும் இன்றி நேர்மையுடன் முன்னெடுக்க வேண்டுகின்றோம். அதைப்போலவே யுத்த இறுதி நாட்களில் சரண் அடைந்ததும், சிறைபிடிக்கப்பட்டதுமான பல ஆயிரம் போராளிகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய ‘போர்க்கைதிகள்’ என்ற வரையறைக்குள் பராமரிக்கவும், அதற்குள்ளான உரிமைகளை வழங்கவும் வேண்டுகின்றோம்.

(இதற்கு முன்பு பல தடவைகள் அந்த போராளிகள் சார்ந்த அமைப்பும், சிறீலங்கா அரசும் போர்க்கைதிகள் என்ற வரையறைக்குள் பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக்கொண்டதை நினைவுபடுத்துகின்றோம்).

சிறிலங்கா அரசு இன்னமும் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதனை சர்வதேசம் உன்னிப்பாக கண்காணித்து மனித உரிமை அங்கு முழுமையாக பேணும் வரைக்கும் அந்த அரசைப் புறக்கணித்து வைக்க ஆவன செய்யுமாறு வேண்டுகின்றோம்.

மிகுந்த அன்புடனும், உள நேர்மையுடனும் இந்த கோரிக்கைகளை உங்கள் முன்வைக்கும் நாம் இவை சம்பந்தமான அனைத்து விபரக் கோர்வையையும், அதனுடன் இணைந்த சாட்சியங்களையும் எந்த நேரத்திலும், நீங்கள் கேட்கும் பட்சத்தில் வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இவ்வாறு நாடுகடந்த அரசாங்கத்தின் போராளிகள், மாவீரர்கள் குடும்ப நலன்பேணல் குழுவின் ஒருங்கு கூட்டுனர் திரு உருத்திராபதி சேகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.