“எமது மக்கள் மீதான அடக்குமுறை இன்னமும் ஏன் தொடர வேண்டும்?” – சுரேஷ் பிறேமச்சந்திரன்!

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற போதிலும் எமது மக்கள் மீதான அடக்குமுறை இன்னமும் கைவிடப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ் சங்கத்தின் ‘மண் சுமந்த மேனியர்’ எனும் தொனிப்பொருளிலான போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் கொடுக்கும் அங்குரார்ப்பண நிகழ்ச்சி யாழ்.வடமராட்சி திக்கம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வகையில் எமது நிலத்தின் மீதான போர் முன்னெடுக்கப்பட்டது. போரில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

அவ்வாறாயின் இன்னமும் ஏன் எமது மக்கள் மீதான அடக்குமுறை தொடர வேண்டும்? எமது மக்கள் தமது சொந்த நிலத்தில் வாழ முடியாத நிலையில் இன்னமும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது சொந்த இடங்களிற்குச் செல்ல முடியாத அவல நிலை இன்னமும் தொடர்கின்றது.

தற்போதைய அரசு எமது மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கை எதனையும் முன்னெடுக்கத் தயாராய் இல்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்று எங்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் போது ஒரு வீடு கூடக் கட்டிக் கொடுப்பதற்கு அரசிடம் பணம் இல்லை என்று எம்மிடம் நேரடியாகவே தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தது.

இதனை அடுத்து இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த மஹிந்தராஜபக்சவுடனான சந்திப்பின் போது இந்தவிடயத்தினை கலந்துரையாடிய இந்திய உயர்மட்டம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐம்பதாயிரம் வீடுகளைத் தாமே கட்டிக்கொடுக்க முன்வந்தது.

எனவே எமது மக்களுக்கான உதவிகளை அரசு வழங்கும் என நம்பியிருக்க முடியாது. எமது மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கைக்கான தொழில்முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நின்று எமக்கான பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். என்று தெரிவித்த சுரேஷ் பிறேமச்சந்திரன்,

இன்று வழங்கப்படுகின்ற பணத்தின் ஒவ்வொரு சதமும் மிகப் பெறுமதி வாய்ந்தது. சுவிஸ் நாடு என்பது மிகவும் குளிர்நிறைந்த நாடாகும். பனி நிறைந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் மிகக் கடினமான காலநிலையினை எதிர்கொண்டே தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவ்வாறு மேற்கொள்கின்ற தொழில்களில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற பணத்தில் இருந்தே இவ்வாறான உதவிகளை வழங்கிவருகின்றனர்.

அந்த மக்கள் வழங்கிவருகின்ற ஒவ்வொரு ரூபா பணமும் மிகப்பெறுமதியானது. இதேபோன்று எமது மக்களை தூக்கி நிறுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.