பொதுமக்கள் மீதான இராணுவத் தாக்குதலுக்கு ஆதாரங்கள் உள்ளன: பா.நடேசன்

e0aeaae0aebee0aea8e0ae9fe0af87e0ae9ae0aea9e0af8dபொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்று அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தமுனைப்புகள் பாரிய மனித அவலத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் இந்நிலை தொடருமாயின் சர்வதேச யுத்த குற்றசெயல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அரசியல்துறைப் பொறுப்பாள் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் இருப்பதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருந்தாவது, மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வழிகாட்டியுள்ளது.

பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்துவதை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் அறிவார்கள். சமீபத்தில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியபோது செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு பணியாளர் காயமடைந்தார்.

மேலும், மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்கும் வகையில் சிறிலங்கா அரசு மருந்துப் பொருட்கள் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவில் பொதுமக்களின் நிலை குறித்து ஆராய சர்வதேசப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உண்மை வெளிவரும். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 2800 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு விமானத்தில் இருந்து கிளஸ்ரர் குண்டுகளை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், ஆட்டிலெறித் தாக்குதல்கள் என்பவற்றை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.