எரித்திரியாவில் புலிகளின் ஆறு விமானங்கள்! – பேராசிரியர் சேனக ஜயசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் தனி இயந்திரங்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை எரித்திரியாவில் பாதுகாத்து வைத்திருப்பதாக சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாகத் தகர்க்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே திகழ்வதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் குமரன் பத்மநாதன் தொடர்ச்சியாக உறவுகளைப் பேணி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா படைத்தரப்பின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தனக்கு நெருங்கிய உறவுகள் இருப்பதாக கேபி தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பாக சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘குமரன் பத்மநாதன், ராஜன் மற்றும் எம்.வீ.கிறிஸ்டியானா கப்பல் ஆகியவற்றை கைது செய்தமை சிறிலங்கா படைத்தரப்பு பெற்ற மிகப்பெரிய வெற்றிகளாக கருதப்படவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மொத்த சொத்துக்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகவும் அனேகமான சொத்துக்கள் மறைக்கப்பட்டு அல்லது வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது வாழ்ந்து வரும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் ரெஜியிடம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேறகொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமானால், அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ற வகையில் உலக நாடுகள் இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும்’ என பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.