முன்னாள் போராளிகள் 500பேர் விடுவிக்கப்படுவராம்!

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகள் 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா பம்பைமடு மத்திய நிலையத்தில் அன்றையதினம் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் கலாசார நிகழ்வினைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்தில் இருக்கும் 500 பேர் தமது குடும்பத்தார் மற்றும் உறவினரிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்படுவரெனவும் அதன் ஆணையாளர் கூறினார்.

ஏற்கனவே கடந்த 27ஆம் திகதி புனர்வாழ்வு பெற்ற ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தாய்மார் 30 பேர் விடுவிக்கப் படுவரென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அது ஒத்திவைக் கப்பட்டது.

இவர்களும் உள்ளடங்களாக 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி தமது குடும்பத்தாருடன் சேர்த்துவைக்கப்படுவர்.

சுகயீனமுற்றோர், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியோர், பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டோரே புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 80 பேர் தமது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.