போர் முடிந்தும் ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் ஓயவில்லை – மன்னாரில் தமிழர்களுக்கு தொடரும் துன்பம்

இராணுவக் கெடுபிடிகள், சிங்கள மயப்படுத்தல்கள் என்பன இல்லாத இயல் புவாழ்க்கையை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போதும் அது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்த நிலைமை தொடர்பாக ‘பி.பி.சி. உலகச் செய்திச் சேவை’ இணையத்தளத்தில் வெளியான செய்திக் கட்டுரை.

உடைந்துபோன கட்டடங்கள், ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தினால் வழங்கப்பட்ட கூடாரங்கள், கொடிகளில் காயும் உடுப்புக்கள், கூடாரங்களுக்கு அருகே சிதறிக்கிடக்கும் பாத்திரங்கள் என்பன இந்தப் பகுதியில் மக்கள் வாழுகிறார்கள் என்பதைக் காட்டியது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போர் மன்னார் விவசாயிகள் மத்தியிலிருந்து எண்ணற்ற உயிர்களைக் காவுகொண்டுவிட்டது. இன்றும் கூட இந்த விவசாயிகள் பாதுகாப்பின்மையினை உணர்கிறார்கள்.

“அவதானமாக இருங்கள், ஒவ்வொரு வார்த்தையினையும் வெளிவிடும் போது கவனத்துடன் இருங்கள். வெளியாருடன் நாங்கள் உரையாடுவதை இந்தப் படையினர் விரும்புவதில்லை” என எச்சரிக்கையுடன் இருக்குமாறு எங்களை அழைத்துச் சென்றவர் கூறினார்.

சோதனைச் சாவடியினைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தினையும் அதியுச்ச விழிப்புடன் காவலில் இருக்கும் படையினர் பரிசோதிக்கிறார்கள். இந்தப் படைவீரர்கள் மிகவும் களைப்புற்றிருந்தாலும் நட்புடன் பழகுவதாகவே தெரிகிறது. குறிப்பாக வாகனத்தில் வந்திருப்பவர் யாராவது தென்பகுதியினைச் சேர்ந்த சிங்களவராக இருந்தால் இந்தப் படைவீரர்கள் அதிக உரிமையுடனும் நட்புடனும் பழகுகிறார்கள்.

பொதுமக்களின் துன்பகரமான வாழ்க்கை

இந்தப் பிராந்தியத்தில் மக்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவே இன்னமும் இருக்கிறது. இதுநாள் வரைக்கும் இருந்த முகாம்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களுக்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை.

“2006ம் ஆண்டு ஒரு உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்லக்கூடிய அளவு பொருட்களை நாங்கள் விட்டுச்சென்றோம். ஆனால் இன்று இரண்டு ‘சொப்பிங் பாக்கு’டன் ஊருக்கு வந்திருக்கிறோம்” என திரு. ஏ கூறுகிறார்.

இந்தப் பிராந்தியத்திலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கிச் சென்றபோது அவர்களின் பணிப்புக்கமைய மடுத் தேவாலயத்தினை அண்டிய இந்தப் பகுதியில் விசித்துவந்த இவர் தனது மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் இடம்பெயர்ந்து சென்றார்.

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வருவதற்கு சற்று முன்னதாக இவர் தனது குடும்பத்துடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்திருந்தார்.

“மாணிக்கம் பண்ணை முகாமில் நாங்கள் தங்கவைக்கப்பட்டோம். ஒரு ஆண்டும் இரண்டு மாதங்களும் நாங்கள் அங்கு தங்கியிருந்தோம். தற்போது நாங்கள் எங்களது காணிக்குத் திரும்பிவிட்டபோதும் வீடு என அங்கு எதுவுமில்லை” என்றார் அவர்.

குறிப்பிட்ட இந்த நபர் முருங்கன் பகுதியில் வசித்துவந்திருக்கிறார். தென்பகுதியில் வேலை செய்தமையினால் சரளமாகச் சிங்களத்தில் உரையாடும் இந்த நபர் நாளொன்றுக்கு 600 ரூபாய்க்கு கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

“சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மா மற்றும் சீனி ஆகியன எங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் தேவையான காய்கறிகளை வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை. முருங்கையிலையினை வறுத்தே பிள்ளைகளுக்கு சோறூட்டுகிறோம். இப்போது எங்களால் வேட்டைக்கும் போக முடியவில்லை. வேட்டைக்குச் செல்வதற்கான துப்பாக்கிகள் எங்களிடம் இல்லை. அத்துடன் நாங்கள் வேட்டைக்குச் செல்லும் காடுகளில் கண்ணிவெடிகள் நிறைந்து கிடக்கிறன. ஆதலினால் ஊரிலுள்ள சிறிய பிராணிகளையே வேட்டையாடுகிறோம்” என்றார் அவர்.

மீள்குடியேற்றப்பட்டிருப்பவர்களது ஒவ்வொருவரிடமும் இதுபோன்ற சோகக் கதைகள் உள்ளன. பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. இடிந்து அழிந்துவிட்ட தங்களது வீடுகளுக்கு அருகாக அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களிலேயே பலர் வாழுகிறார்கள்.

அடிமட்டத்திலிருந்தே இவர்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையினை ஆரம்பிக்கவேண்டியுள்ளது. வாழ்வினை மீண்டும் கொண்டுசெல்வதற்குத் தேவையான போதிய உதவிகள் எவையும் தமக்குக் கிடைப்பதில்லை என்கிறார்கள் இவர்கள்.

துன்பத்தினை அதிகரிக்கும் செயல்

“எங்களது வீடுகள் அனைத்தும் அமைத்துத் தரப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் அவர்கள் இதுவரை எதனையும் செய்யவில்லை” என திரு.ஏ கூறுகிறார்.

அரசாங்கத்தின் மீள்எழுச்சித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட ஒரு வீட்டினை நிர்மானிப்பதற்கு 6,50,000 ரூபாய்கள் தேவை. ஆனால் அரசாங்கத்திடம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்குவதற்காக 3 ,25,000 ரூபாய்களே இருப்பதாக இந்தப் பகுதியிலுள்ள அதிகாரிகளிடமிருந்து அறியமுடிகிறது.

“நிரந்தரமில்லாத தற்காலிக வீடுகளைத் தமிழர்களுக்கு அமைத்துக்கொடுத்து அவர்களது துன்பங்களை அதிகரிப்பதுதான் அரசாங்கத்தின் எண்ணம்” என தமிழ்த் தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்.

“வீடுகளை மீளவும் நிர்மாணிப்பது தொடர்பில் எந்தத் திட்டமிடலும் இல்லை. மீள்குடியேற்றம் தொடர்பில் உள்ளூர் மக்களுடனோ அல்லது இந்தப் பிராந்தியத்தின் தலைவர்களுடனோ கலந்துரையாடப்படவில்லை.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினை விட இது மோசமானது. ஆனால் மக்களின் துன்பத்தினைப் போக்கும் வகையில் எவரும் உருப்படியாக எதனையும் செய்யவில்லை” என அவர் தொடர்ந்து கூறுகிறார்.

“மக்களுக்குத் தேவையான சேவைகளைத் தன்னால் வழங்கமுடியாதெனில், அது அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கான சேவையினைச் செய்வதற்கான முழுமையான அனுமதியினை வழங்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வதற்குத் தயாராக இல்லை.

மீள்குடியேற்றத் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழர்களது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறை காட்டுகிறது” என்றார் அவர்.

மன்னாரின் அரிப்பு பகுதியில் இடம்பெயர்ந்த முல்லீம்கள் குடியேறியிருக்கிறார்கள். முஸ்லீம்களின் வருகை இந்தப் பிரதேசத்தில் அமைதியினை இல்லாது செய்துவிட்டது என உள்ளூர் தமிழர்கள் தங்களது அதிருப்தியினை வெளியிடுகிறார்கள்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் தமிழர்கள் மீள்குடியேற்றப்பட முன்னனே முல்லீம்கள் குடியேறிவிட்டார்கள் என அரிப்புப் பகுதியில் வாழும் தமிழர்கள் கூறுகிறார்கள்.

மன்னாரின் திருக்கேதீஸ்வரம் பகுதியில் சிதைந்துபோன வீதிகளைத் திருத்தும் பணிகளிலும் ஆலயத்தின் உடைந்துபோன பகுதிகளைக் கட்டுவதிலும் சிங்கள ஒப்பந்தகாரர்களே ஈடுபட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் வேகமாக முளைவிடுவதைக் காட்டும் சிறந்த உதாரணமாக மன்னார் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மகாதித விகாரையினைக் குறிப்பிடலாம்.

இவ்வாறாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதைத் தமிழர்கள் முற்றாக வெறுக்கிறார்கள்.

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு அவர்களின் பராமரிப்பின் கீழ் இருந்துவரும் இந்த விகாரையில் இரண்டு பௌத்த துறவிகள் நிரந்தரமாகவே வசிக்கிறார்கள்.

மகாதித விகாரரை இந்தப் பிராந்தியத்தில் முன்னரே இருந்ததாக தொல்லியலாளரும் ஹெல உறுமைய என்ற கட்சியின் முன்னாள் தலைவருமான எல்லாவல மேத்தானந்த தேரர் உறுதிப்படுத்தியதாக இந்தப் பகுதியில் இருக்கும் படையினர் வாதிடுகிறார்கள்.

“தங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டிருப்பதாக திருக்கேதீஸ்வரத்தினது ஆலய நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்” என ஆலயப் பகுதியில் கடமையில் இருக்கும் படையினர் ஒருவர் கூறினார்.

சிங்களப் பெயரில் வீதி

வன்னிப் பகுதியெங்கும் புத்தரின் சிலைகள் அதிகம் அமைக்கப்பட்டிருப்பதை ஏ-9 வீதி வழியாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணிக்கும் போது நாம் உறுதிப்படுத்தலாம். எல்லாவற்றையும் விட மிக மோசமாக இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட சில வீதிகளுக்குச் சிங்களப் பெயர்கள் இடப்பட்டிருக்கிறன.

விடத்தல்தீவு பகுதியில் காமினி குலரத்தின என்பவரின் பெயரால் ஹசாலக வீரையா என்ற பெயர் குறிப்பிட்ட ஒரு வீதிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்கின்றபோதும் வீதிகளில் உள்ள குறியீடுகள் சிங்களத்தில் மாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது.

“பாதுகாப்பு என்ற போர்வையில் கடற்படையினரும் இராணுவத்தினரும் மக்களின் நிலங்களை அபகரித்திருக்கிறார்கள். எங்களது கலாச்சாரத்தினையும் பாரம்பாரியத்தினையும் இல்லாது செய்வதற்கு இவர்கள் முனைகிறார்கள்” என தனது பெயரினை வெளியிட மறுத்த உள்ளூர் வாசி ஒருவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமையானது ஏற்கனவே நொந்துபோயிருக்கும் தமிழர்களை மேலும் துன்பத்திற்குள் தள்ளியிருக்கிறது. கடந்த காலப் போரின் விளைவாக அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த மக்களின் உரிமைக்காக் குரல்கொடுக்கக்கூடிய மக்கள் அமைப்புக்களோ அல்லது அரசியல் அமைப்புக்களோ அங்கில்லை.

“தங்களது நாளாந்த வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துவதற்கே நாதியற்றவர்களாக இருக்கும் இவர்கள் அரசியல் தொடர்பில் அலட்டிக் கொள்ளும் நிலையில் இல்லை’ என முன்னணி மதகுரு ஒருவர் என்னிடம் கூறினார்.

கொழும்பு ஆட்சியாளர்கள் எதனை விரும்புகிறார்களோ அதனை ஏற்கும் நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது சிறிலங்காவில் நீடித்து நிலைக்கக்கூடிய அமைதி ஏற்படுவதற்கான ஏதுநிலையினைப் பெரிதும் பாதிக்கும்.

வீதிகளை மீள நிர்மானித்துவரும் அரசாங்கம் உட்கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப் பாலத்தினை அகலப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 500 மீற்றருக்கும் பதுங்குகுழிகளும் காப்பரண்களும் அமைக்கப்பட்டிருப்பதோடு இராணுவத்தின் செறிவான பிரசன்னமும் அங்குள்ளது.

இது இரண்டு சமூகங்களுக்குமிடையிலான உறவு மேம்படுவதற்கான அம்சமாகத் தெரியவில்லை. இராணுவ ஆட்சி நிலவும் பிராந்தியம் ஒன்றில் இருக்கிறோமோ என்ற எண்ணத்தினையே இந்த நிலைமை எமக்கு ஏற்படுத்துகிறது.

ஆயுதங்கள் எதுவுமற்ற அமைதியானதொரு சூழல் ஏற்படுத்தப்படுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்ற கேள்வியினையே இந்தப் பகுதியில் கடமையில் இருக்கும் பாதுகாப்புப் படையினரும் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களும் கேட்கிறார்கள்.

– நன்றி: புதினப்பலகை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.