இலங்கையில் இப்போதும் இனச் சுத்திகரிப்பு! ஓசியன் லேடி பயணி பேட்டி

”இலங்கையில் இனச் சுத்திகரிப்பு இப்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.” இப்படிக் கூறி இருக்கின்றார் ஓசியன் லேடி கப்பலில் கடந்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதி கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவர்.

கனடாவின் மர்கம் நகரில் இருந்து வெளியாகும் The Economist & Sun பத்திரிகை இவரை பேட்டி கண்டிருந்தது.

இவர் தமிழில் கூறிய விடயங்களை கனேடிய தமிழர் பேரவையின் தொண்டர்களில் ஒருவரான பேரி.காசிநாதன் மொழிபெயர்த்து அப்பத்திரிகையின் நிருபருக்கு கூறினார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த ஈழத் தமிழ் பயணியின் பெயர் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அவர் அப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு,

”ஓசியன் லேடியில் 45 நாள் பயணம். நிச்சயமாக செத்து மடியப் போகிறோம் என்றே நம்பினோம். உணவை பற்றி சிந்திக்க நேரம் இருக்கவில்லை. கனடாவை ஒருவாறு வந்தடைந்தோம். கனடாவில் யாரையுமே எனக்குத் தெரியாது.

தற்போது அகதி அந்தஸ்துக்காக காத்திருக்கின்றேன். இலங்கையில் நிம்மதியாக ஒரு காலத்தில் வாழ்ந்தோம். சொந்த வீடு அங்கு உண்டு. எனது மனைவியும், குழந்தையும் இப்போதும் இலங்கையில்தான். ஒருநாள் எனது உயிரை உடனடியாகக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது.

எனவே கப்பலில் புறப்பட்டு வர நேர்ந்தது. ஆறு மணித்தியாலங்களுக்கு இடையில் இரு பெட்டிகளுடன் தாய்லாந்தை வந்து அடைந்தேன். 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை ஒருவருக்கு கொடுத்து ஓசியன் லேடி கப்பலில் இடம் பிடித்தேன்.கனடாவை நோக்கிய எதிர்பார்த்து இராத சட்டவிரோதமான கடல் பயணம்.

மனித விழுமியங்களுக்கு இலங்கையில் சமாதி கட்டி விட்டார்கள்.இலங்கையின் யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அல்ல. தமிழருக்கு எதிரான யுத்தம். நான் தப்பி வந்திருக்காவிட்டால் கொல்லப்பட்டிருப்பேன். எனது குடும்பம் எனது சடலத்தைக் கூட அடையாளம் காண முடியாத நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் எனது முகத்தை எவருடம் அடையாளம் காண முடியாதபடி இலங்கை அரசு செய்திருக்கும்.

கனடாவை வந்து அடைந்த பின் நான்கு மாதங்கள் பிரித்தானிய-கொலம்பிய தீவில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன். நான் இந்த உலகத்தில் இருந்து பிரிக்கப்படவில்லை என்பதன் அடையாளம் அங்கே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மாத்திரம். ஓசியன் லேடி பயணிகளுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தினர்.

அது மிகுந்த கவலையை தந்தது. நாங்கள் தமிழராய் பிறந்து விட்ட காரணத்தால் ஊடகங்கள் எங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தின. எங்களுக்குப் புலிகளுடன் தொடர்பு உண்டு என்று கனடாவுக்கான இலங்கைத் தூதரகம் பிரசாரங்களை முடுக்கி விட்டது. எனது மனம் இப்போது ஒரு நிலையாக இல்லை.

என்னால் வேலை செய்ய முடியாது உள்ளது.பல்கலைக் கழகத்துக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியாதுள்ளது. நான் கனேடியர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.