தமிழக மடல்: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன? உணர்வாரா டி.ஆர்.பாலு!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எதுவும் அவர்களுக்கு வந்த சேரவில்லை என்ற குற்றச்சாற்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு, “இப்பிரச்சனையை நாம் எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் அணுக வேண்டு்ம். இந்தியா ஒரு காவல் அதிகாரி போல நடந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்டத் தலையீடு பிரச்சனைகளைக் குழப்பி, இதுவரை செய்தவற்றையெல்லாம் கெடுத்துவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

அடேயப்பா, அப்படி என்னத்தை ஈழத் தமிழர்களுக்காக இந்தியா செய்துவிட்டது, இப்போது கெடுப்பதற்கு? என்ற தெரியவில்லை!

  1. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு இந்தியா துணை போனதையா? அல்லது
  2. சொந்த நாட்டு மக்களையே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொன்று குவித்த ராஜபக்ச அரசிற்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிரான வெளிப்படையாகவே ‘வேலை’ செய்து தோற்கடித்ததோடு மட்டும் நிற்காமல், ராஜபக்ச அரசைப் ‘பாராட்டி’ சிறிலங்கத் தூதரே முன்மொழிந்த தீர்மானத்தை நிறைவெற்றித் தர உதவியதையா? அல்லது
  3. வன்னி முகாமில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட மக்களை மறுகுடியமர்த்தம் என்று பெயரில் அவர்களுக்கு 5 துத்த நாகத் தகடுகை அளித்ததையா? அல்லது
  4. சிங்கள மக்களின் வசதிக்காக தென்னிலங்கையில் உள்ள மாத்தரையிலிருந்து கொழும்புவிற்கு இரயில் பாதை அமைக்க ராஜபக்ச அரசிற்கு ரூ.800 கோடி நிதியுதவி செய்ததையா? அல்லது
  5. மனித உரிமை மீறல்கள், போர்க குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்று உலகமே ராஜபக்ச அரசை குற்றம் சாற்றிக்கொண்டிருக்க, நிதியின்றி தத்தளித்த அந்த அரசிற்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறிலங்க அரசு கேட்டதை விட, அதிகமாக 2.6 பில்லியன் டாலர் கடனுதவியை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து டெல்லி அரசு பெற்றுத் தந்தையா? அல்லது
  6. இவர் அமைச்சராக இருந்து ‘மிகச் சிறப்பாக’ செயல்படுத்தி வந்த சேது சமுத்திரத் திட்டம், சிறிலங்க அரசின் பொருளாதார வசதிக்காகவும், அந்நாட்டோடு இந்தியா முழுமையான இராணுவ உறவு கொள்ள உதவியாக கிடப்பில் போட ஒப்புக் கொண்டதையா?

எதைச் சொல்கிறார் என்று புரியவில்லை.

அரசியல் கட்சிகள் அல்ல, மனித உரிமை அமைப்புகள் அனைத்தும், அங்கு சென்று திரட்டிய தகவல்களின் அடிப்படையில்தான் ஈழ மக்களுக்காக இந்தியா (தமிழக அரசும்) கொடுத்த உதவிகள் எதுவும் அம்மக்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை என்று கூறின. அம்மக்களை மீள் குடியமர்த்தல் என்ற பெயரில் முகாம்களை விட்டு சிறிலங்க அரசு விரும்பிய இடங்களுக்குத் துரத்தப்பட்டபோது அளிக்கப்பட்ட ரூ.25,000 நிதி கூட பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பு (International Migration Organization) என்ற அமைப்புதான் அளித்தது.

முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டத் தண்ணீரை, வெளியில் இருந்த கொண்டு வந்து கொடுக்க தண்ணீர் வண்டிகளை அளித்ததற்குக் கூட வாடகை வசூலித்தது ராஜபக்ச அரசு! ரூ.500 கோடி கொடுத்ததே, இதையேல்லாம் தட்டிக் கேட்டதா இந்தியா?

ராஜபக்ச அரசுடன் நட்பு கொண்டு தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்ப்பட்டதைத் தவிர, ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன?

அது மறைமுகமாகவும், நேரிடையாகவும் செய்த ‘புண்ணிய’ காரியங்களை தமிழ் மக்கள் மறந்துவிட வேண்டும் என்பதற்காக்த்தான் வீடு கட்டிக் கொடுக்கிறேன். விவசாயம் செய்யக் கருவிகள் கொடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும், பாலுவிற்கு தெரியாதா என்ன?

பசில் ராஜபக்ச கிங்!

சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் சகோதரரும், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டு அமைச்சருமான பசில் ராஜபக்சேயை ‘கிங்’ என்று அந்தப் பேட்டியில் வர்ணித்துள்ள பாலு, அவரோடு பேசியதற்குப் பிறகு தமிழர்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டது என்று புளங்காகிதத்துடன் கூறியுள்ளார்!

  • இது அறியாமையா?
  • இராஜதந்திரமா?
  • பிரச்சாரமா?

ஈழத் தமிழர்கள் யாரைக் கேட்டாலும் கூறுவார்கள் பசில் ராஜபக்சவின் நரித்தனத்தைப் பற்றி! போர் முடிக்கப்பட்ட நாள் தொட்டு தமிழர்கள் பகுதியில் சிங்களர்களைக் குடியேற்றும் திட்டத்தை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்தி வருபவர் பசில் ராஜபக்ச!

அகதிகளாக பரிதவித்துவரும் தமிழர்களுக்கு நிவாரணம் அளித்து, அவர்களை மீள் குடியமர்த்த தங்களால் ஆன அனைத்தையும் செய்த ஐ.நா. அகதிகள் அமைப்பும், இதர பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் தங்கள் பணியைத் தொடர விடாமல், அவற்றிற்கு அயல் நாடுகளில் இருந்த வந்த நிதியை அனுமதிக்க மறுத்தவர் பசில் ராஜபக்ச!

ஆனால் அவரைச் சந்தித்துப் பேசியப் பிறகு தனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது என்று பாலு கூறுகிறார். இப்படிப்பட்ட அடிமை எந்த கிங்கிற்கு கிடைப்பார்!

“தமிழர்களைப் பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம், ஆனால் இது தொடர்பாக சிறிலங்க அரசை நட்புடனே அணுகுவோம்” என்று பாலு கூறியுள்ளார். இங்குதான் அவருடைய அபார ராஜ தந்திரம் வெளிப்படுகிறது. இந்த ‘நட்புடன்’ என்ற சொல் டெல்லிக்கு உரியது. அது கொழும்புவுடனான நட்பை வளர்த்துக் கொள்ளத் தமிழர்களுக்கு உரிய எதையும் விட்டுத் தரத் தயாராக உள்ளது. அந்த இராஜ தந்திரத்தைதான் டி.ஆர்.பாலுவும் சற்றும் பிசகாமல் கடைபிடித்துள்ளார்.

வன்னி முகாம்களில் தமிழர்கள் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கை அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் அல்லவா இவர்!

மக்களவையில் பாலு பேசியது!

வீரகேசரி நாளிதழிற்கு இப்படி பேட்டி கொடுத்த டி.ஆர்.பாலு, கடந்த வாரம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மக்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, “தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில்தான் மீண்டும் குடியமர்த்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தான் விடுத்த இந்தக் கோரிக்கையை எவ்வாறு ‘நட்பு’டன் நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லிக்கு பாலு ஆலோசனை கூறி, அதனை நிறைவேற்றியும் தந்தால் நிச்சயம் ஈழத் தமிழர்கள் நிச்சயம் பாலுவிற்கு நன்றி கூறுவார்கள்.

தமிழகத்திலிருந்து ஆரூரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.