அச்சுவேலி – செல்வச்சந்நிதி வீதியில் பொதுமக்கள் பயணிக்க மீண்டும் தடை?

அச்சுவேலி  செல்வச்சந்நிதி வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

எனினும் வீதி மூடப்பட்டது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரால் உத்தியோக பூர்வமான அறிவிப்பேதும் விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

30 வருடங்கள் மக்களின் பயன்பாட்டுக்குத் தடை செய்யப்பட்டிருந்த அச்சுவேலி  செல்வச்சந்நிதி வீதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி கொடியேற்றத்திற்கு முன்னர் பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டிருந்தது.

பகல் வேளையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இவ்வீதியூடாகப் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் இந்த வீதியால் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

அச்சுவேலியில் இருந்து செல்லும்போது தம்பாளைச் சந்திக்கு அப்பால் இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் கோயிலுக்கு முன்னாலும் தொண்டமானாற்றில் இருந்து வரும்போது தொண்டமானாறு பாலத்திலும் பாதை தற்போது மூடப்பட்டிருக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.