வன்னி மக்களுக்கான உதவிப்பொருட்களை திட்டமிட்டு தடுத்து வைத்துள்ளது சிறீலங்கா அரசு

வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட உதவிப்பொருட்களை எந்த காரணங்களுமின்றி சிறீலங்கா அரசு தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்வதாற்காக வெளிநாட்டு அமைப்புக்களால் வழங்கப்பட்ட 400 மில்லியன் சுவிஸ் பிராங்ஸ் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள், நெல் வகைகள் உட்பட பெருமளவான பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் சேமிப்பு நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டபோதும், அதனை விநியோகம் செய்ய சிறீலங்கா அரசு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது.

தொழில்நுட்ப பிரச்சனைகள் என்ற காரணத்தை காட்டி சிறீலங்கா அரசு இந்த விநியோக பணிகளை தடுத்து வருவதாக அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கவென கொண்டு செல்லப்பட்ட இந்த பொருட்கள் கடந்த இரு வாரங்களாக விநியோகம் செய்யப்படாது முடங்கிக்கிடக்கின்றன.

இதனை விநியோகம் செய்ய உதவுமாறு அரச தலைவர் நடவடிக்கை குழுவின் செயலாளர் எஸ் பி திவரட்னாவிடம் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் கோரிக்கை விடுத்தபோது, அது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், தம்மிடம் இது தொடர்பில் கேள்விகள் கேட்க வேண்டாம் எனவும் அவர் பதில் கொடுத்துள்ளார்.

இந்த பொருட்களை வினியோகம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் வடமாகாண ஆளுணர் ஜி. ஏ சந்திரசிறீ ஆகியோர் அனுமதிகளை வழங்கியபோதும், பசில் ராஜபக்சா தலைமையிலான நடவடிக்கை குழு அதனை திட்டமிட்டு தடுத்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதாகவும், இது தொடர்பில் பசில் ராஜபக்சாவை தொடர்புகொள்ளுமாறு சிறீலங்கா அரசு அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தை பணித்துள்ளது.

விவசாயம் மேற்கொள்ளும் பருவகாலம் தற்போது ஆரம்பமாகவுள்ளதால் இந்த பெருட்களை உடனடியாக விநியோகிக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்தாலே மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும் எனவும் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள 2,000 குடும்பங்கள் இந்த பருவகாலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஆயத்தமாகி வருவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா அரசின் இந்த அடாவடித்தனத்தால் விசனமடைந்துள்ள அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் தற்போது இந்த பொருட்களை விநியோகிக்க உதவுமாறு இந்திய தூதரகத்தை நாடியுள்ளது.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எந்த உதவிகளையும் மேற்கொள்ளாது அவர்களை துன்பத்தில் தள்ளியுள்ள சிறீலங்கா அரசு, வெளிநாடுகள் வழங்கிவரும் உதவிகளையும் திட்டமிட்டு தடுத்துவருவது நாம் கவனிக்கத்தக்கது. மீள்குடியேற்றப்பட்ட மக்களின் விவசாய நடவடிக்கைகளை பேரழிவுக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் மகிந்தாவின் சகோதரர் பசில் ராஜபக்சா இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.