சொந்தக் காணிகளில் நுழைந்த மக்கள் படைத் தரப்பால் வெளியேற்றம்!

பொன்னகர் மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியிருப்பதற்காக சென்றவேளை இராணுவத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தங்கள் சொந்தக் காணிகளை துப்பரவு செய்து குடியேற முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு படைத்தரப்பால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்ல விடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் காணிகளை வடக்கு மாகாணசபைக்கென அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி தாம் சொந்த இடத்தில் குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நேற்று காணிகளை துப்புரவு செய்துகொண்டிருந்தவேளை அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவலாளிகள் படைத்தரப்புக்கு அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் காணியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

தமது சொந்தக்காணிகளில் தம்மைக் குடியிருத்துமாறு அரச அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்த பொழுதும் தமது அவலம் குறித்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள் தமது சொந்தக்காணிகளில் தம்மை குடியமர்த்தும் படி வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடமும் மனுக் கையளித்ததாக தெரிவித்தார்கள்.

மழை ஆரம்பித்துள்ள தருணத்தில் கூடாரங்களில் வாழ முடியாத நிலைமை காணப்படுவதாகவும் கூடாரங்களுக்குள் பாம்புகள் முதலிய விசஜந்துக்கள் வருவதால் குழந்தைகளை வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.