தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை நிருபமாராவ் சந்திக்கமாட்டார்?

இலங்கையில் மறு குடியமர்வு செய்யப்படும் தமிழர்கள் நிலைகுறித்து ஆய்வு செய்வதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இலங்கை சென்றுள்ளார்.

இன்று அவர் இலங்கை வடக்கு பகுதிக்கு சென்று தமிழர்களின் நிலை குறித்து நேரில் பார்வையிடுகிறார். இலங்கை வடகிழக்கு பகுதியில் நடந்து வரும் மீள் குடியேற்ற புனரமைப்புத் தவிர இந்தியா அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் நிருபமாராவ் பார்வையிடுகிறார். அதன் பிறகு இலங்கை தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

இதற்கிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தலைவர்களும், எம்.பி.க்களும் நிருபமாராவை சந்தித்து பேசுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தமிழர் பிரதிநிதிகளை அவர் எப்போது எங்கு சந்திப்பார் என்ற விபரம் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நிருபமாராவை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தலைவர்கள் யாரும் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை தெரிய வந்துள்ளது. நிருபமாராவின் கொழும்பு நிகழ்ச்சி நிரல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை நிருபமா சந்திப்பதற்கான விபரம் எதுவும் இடம்பெறவில்லை. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 தமிழர்கள் மீள் குடியேற்றம் பற்றி ஆய்வு செய்யும் நிருபமாராவ் தமிழர்களின் அதிகாரப்பூர்வ பிரதி நிதிகளை சந்திக்காவிட்டால் முழுமையான உண்மை நிலவரம் இந்தியா அரசுக்கு தெரியாமலே போய்விடும் என்று ஈழத்தமிழர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.