கனடா செல்லும் கப்பலுக்காக ஈழத்தமிழர்கள் பலர் தாய்லாந்தில் காத்திருப்பு

‘சண் சீ’ என்ற ஈழ அகதிகள் கப்பல் கனடாவை சென்றடைந்துள்ள நிலையில் இன்னுமொரு கப்பல் தாய்லாந்திலிருந்து ஈழ அகதிகளை எற்றிக்கொண்டு கனடா செல்ல தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஈழ அகதிகளின் கப்பல் பயணம் குறித்து ’த குளோபல் அன்ட் மெயில்’ என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்திக்கட்டுரை.

தாய்லாந்தின் தலைநகர் தாயின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு அறையினை மாத்திரம் கொண்ட தொடர்மாடி வீடு ஒன்றில் சிறிலங்காவினைச் சேர்ந்த நான்கு தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள்.

விடுமுறை காலத்தில் தாய்லாந்தினைச் சுற்றிப்பார்க்கவே தாங்கள் வந்ததாக இவர்கள் கூறுகின்றபோதும் அந்த அறையினை விட்டு வெளியே வரவே அஞ்கிறார்கள்.

நாள் முழுக்க அந்த அறையிலுள்ள கட்டிலில் இந்த நான்கு ஆண்களும் அமர்ந்திருந்து பழைய ஆங்கிலத் திரைப்படங்களையும் மற்றும் தங்களுக்கு அறவே புரியாத தாய் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏன் தாய்லாந்துக்கு வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே தந்தார்கள் “நாங்கள் உல்லாசப் பயணிகள். கடந்தவாரம் இங்கு வந்தோம். அடுத்த வாரம் திரும்பிவிடுவோம்” என 25 வயதுடைய சுப்பிரமணியம் எங்களிடம் தெரிவித்தார். அவர் ஆங்கிலத்தினை நன்கு விளங்கிக்கொள்வதை அவதானிக்கமுடிந்த போதிலும் எங்களுடன் தொடர்ந்தும் ஆங்கிலத்தில் உரையாட மறுத்துவிட்டார்.

பாங்கொக்கின் வட புறநகர்ப் பகுதியிலுள்ள ஐந்து மாடிகளைக்கொண்ட இதே கட்டடத்தில் இவர்களைப் போலவே தங்களை உல்லாசப்பயணிகள் எனக் கூறிக்கொள்ளுபவர்கள் இரண்டு அறைகளில் இருக்கிறார்கள். ஒரு அறையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமும் மற்றைய அறையில் நாங்கு ஆண்களைக் கொண்ட ஒரு குழுவும் இருக்கிறது.

வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவதற்கான ஓர் இடைத்தங்கல் இடமே இது என வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் விடுதலைப் புலிகளின் வலையமைப்புத் தொடர்பில் நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

தாய்லாந்திலிருந்து புறப்பட்டு கடந்த மாதம் 492 தமிழ் அகதிகளுடன் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவினை வந்தடைந்த ‘எம்.வி சண் சீ’ போன்றதொரு கப்பலுக்காகவே இவர்கள் உண்மையில் காத்திருக்கிறார்கள். பாங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் நாம் விஜயம் செய்த இதுபோன்ற பல இடங்களில் டசின் கணக்கான தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.

“சண் சீ கப்பலை ஒழுங்கு செய்தவர்கள் யாரோ அவர்கள் இன்னொரு அகதிகள் கப்பலை ஒழுங்குசெய்கிறார்கள். இந்தக் கப்பல் புறப்படுவதற்குத் தயாராவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும் என எனக்குத் தெரியாது” என தனது பெயரைக் குறிப்பிட மறுத்த பாங்கொக்கைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட தமிழர் ஒருவர் கூறுகிறார்.

கனடா நோக்கியா நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள் என இவ்வாறு தங்கியிருக்கும் தமிழர்களிடம் கேட்டபோது, இல்லை என எமக்குப் பதிலளிப்பதற்கு முன்னர் தங்களுக்குள் ஏதோ தமிழில் உரையாடிக்கொண்டார்கள்.

தாய்லாந்திலிருந்து வெகு தூரத்திலிருக்கும் கனடா எனக் கதைக்கும் போதே புன்முறுவல்செய்யும் இவர்கள் தாங்கள் தாய்லாந்தினைச் சுற்றிப்பாக்க வந்த உல்லாசப் பயணிகளே எனக் கூறுகிறார்கள்.

கனடா நோக்கிச் செல்லும் கப்பலில் செல்வதற்காக அண்மையில் தாய்லாந்திற்கு வந்த தமிழர்கள் தங்கியிருக்கும் இடம் தொடர்பில் எங்களுக்கு ஒருவர் தகவல் தந்தார்.

குறிப்பிட்ட அந்த விடுதியிலும் அதற்கு அண்மையிலுள்ள பல இடங்களிலும் சிறிலங்காவிலிருந்து அண்மையில் வந்தவர்கள் பலர் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தமிழர்கள் பாங்கொக்கினைச் சுற்றிப்பார்ப்பதற்கு சென்றதில்லை என சுப்பிரணமணியமும் அவருடன் இருக்கும் ஏனைய ‘உல்லாசப்பயணிகளும்’ தங்கியிருக்கும் கட்டடத்தின் நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.

இந்தத் தமிழர்களிடம் வாகன வசதிகள் எதுவுமில்லை தவிர, பாங்கொக்கின் நகரமையத்திலிருந்து ஒரு மணிநேரப் பயணத் தூரத்திலேயே இவர்கள் இருக்கிறார்கள்.

கனடா நோக்கிய தங்களது பயணத்திற்காகக் காத்திருக்கும் இந்தத் தமிழர்கள் இருக்கும் இந்தத் தொடர்மாடி வீடு டொண்மொன் விமான நிலையத்திற்கு அருகாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் விமானங்கள் இறங்கி ஏறும்போது கட்டடமே அதிர்கிறது.

ஒற்றைப்படுக்கை, சிறிய வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ஒரு மின்விசிறி ஆகியவற்றைக் கொண்ட இந்த அறைகளிலிருந்து தமிழர்கள் அரிதாகவே வெளியே வருவதாக கட்டடத்தின் முகாமையாளர் கூறுகிறார்.

இரண்டு வாரங்களுக்கு செல்லுபடியாகும் பயண அனுமதியில் தாய்லாந்திலிருக்கும் இவர்கள் இந்தத் தொடர்மாடி வீட்டின் மூன்று அறைகளில் ஒன்பது மாதங்களுக்கு இருப்பதற்கு ஒப்பந்தம் எழுதியிருக்கிறார்கள்.

ஒரு அறைக்கு மாதமொன்றுக்கு 100 டொலர் கட்டவேண்டும். குறித்த ஒரு அறையில் தங்கியிருக்கும் மூன்று தமிழர்களில் இருவர் இந்த ஆண்டே தங்களது கடவுச்சீட்டினைப் பெற்றிருக்கிறார்கள். இங்கு தங்கியிருக்கும் சுப்பிரமணியத்திற்கு யூலை 15ம் நாள் கொழும்பில் வைத்து கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, இங்கு பாங்கொக்கில் அறைகளை வாடகைக்கு எடுப்பதற்கு மூன்று வாரங்களின் முன்னர்தான் இவர் தனது கடவுச்சீட்டினைப் பெற்றிருக்கிறார்.

குறிப்பிட்ட இந்த அறைகளில் தமிழர்கள் மாறி மாறி இருந்துவருவதாக இங்கு பணிபுரிபவர்கள் கூறுகிறார்கள். “இவர்கள் நீண்ட நாட்களுக்குத் தங்கியிருக்கமாட்டார்கள். நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாக வரும் இவர்கள் குறிப்பிட்ட கலத்தின் பின்னர் சென்றுவிடுவார்கள். இதன் பின்னர் வேறு ஒரு குழு வரும்” என இந்தத் தொடர்மனையின் பதிவுகளைப் பேணும் றியன்கிராட்டா பியங்காய் கூறுகிறார்.

உண்மையில் இந்தத் தமிழர்கள் கனடா நோக்கிச் செல்லும் எதிர்பார்ப்புடன் தான் இருக்கிறார்களெனில், பசுபிச் சமுத்திரத்தினைத் தாண்டிய 10 வாரங்கள் பயணித்து கனடாவிற்குச் சென்றிருக்கும் ‘சண் சீ’ கப்பலில் சென்றவர்களின் தொடராக இது இருக்கும்.

கடந்த ஏப்பிரல் மாதம் தாய்லாந்தின் தென்பகுதியிலுள்ள துறைமுக நகரமான சொங்லாவிலிருந்து புறப்பட்ட ‘சண் சீ’ கப்பலில் கனடாவிற்குள் சென்றவர்கள் அனைவரும் கப்பல் புறப்படுவதற்குக் குறிப்பிட்ட சில வாரங்களின் முன்னர் உல்லாசப் பயணிகளுக்கான பயண அனுமதியில் சிறிலங்காவிலிருந்து தாய்லாந்திற்கு வந்திருந்ததாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

பாங்கொக்கிலிருந்து புறப்பட்ட 120 தமிழர்கள் சொங்லா என்ற துறைமுக நகரத்திற்கு அண்மையிலள்ள ஒரு இடத்தில் இறங்கியிருந்ததாக மே 1ஆம் நாள் தாய்லாந்தினது அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தார்கள்.

அங்கிருந்து மீன்பிடிப்படகுகள் மூலம் பயணித்த இவர்கள் தாய்லாந்துக் குடாவில் தரித்துநின்ற ‘சண் சீ’ கப்பலில் ஏறியிருக்கிறார்கள். இது இடம்பெற்று இரண்டரை வாரங்களின் பின்னர் 40 தமிழ் உல்லாசப்பயணிகள் இந்தத் துறைமுக நகரத்திலுள்ள விடுதியொன்றில் ஒரு இரவு தங்கியிருந்திருக்கிறார்கள். பின்னர் இவர்களும் மீன்பிடிப் படகுகளில் ஏறி குறிப்பிட்ட கப்பலுக்குச் சென்றிருக்கலாம்.

பெருமெடுப்பிலமைந்த இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு பெரும் பணம் தேவைப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தொகையுடைய தமிழர்கள் தாய்லாந்தில் அகதி அந்தஸ்தினைக் கோரியிருக்கிறார்கள். தாங்களும் கனடாவிற்குச் செல்வதற்கே விரும்பியதாகவும் ஆனால் தங்களிடம் போதிய பணம் இல்லாதமையினால் இங்கேயே தொடர்ந்தும் இருக்கவேண்டிய வந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

“ஏனையவர்களைப் போலவே நானும் கனடாவிற்குச் செல்லுவதற்கு விரும்பினேன். ஆனால் இதற்கு அதிக பணம் செலவாகும்” என 23 வயதுடைய சுகுமார் கூறுகிறார்.

16 மாதங்களின் முன்னர் முடிவுக்கு வந்த சிறிலங்காவினது இனப்போரின் இறுதிக்கட்டத்தில் சிக்குண்ட இவரது தந்தை காணாமற்போய்விட தானும் தடுத்து வைக்கப்படலாம் என்ற நிலையில் தான் அங்கிருந்து தப்பிவந்ததாக இவர் கூறுகிறார்.

கனடா நோக்கிய பயணத்திற்கு ஆட்களை ஒழுங்குபடுத்துபவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் பல்லாயிரக்கணக்கான டொலர் பணத்தினைக் கோருவதாக பாங்கொக்கிலுள்ள ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் அகதியாகப் பதிந்திருக்கும் சங்கர் கூறுகிறார். “ஐயோ”..! “ஒரு சாதாரண அகதியினால் அந்தத் தொகையினைக் கட்ட முடியுமா…” என்கிறார் அவர்.

நன்றி: புதினப்பலகை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.