சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது – எஸ்.எம்.கிருஸ்ணா

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வழக்கத்தை விட அதிகமாக சீனா ஈடுபாடு காட்டி வருகிறது அதன் திட்டங்களை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.

இன்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில், சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானம் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஸ்மீரில் உள்ள கில்கிற் – பல்ரிஸ்தான் பிராந்தியத்தில் சீனா 11,000 துருப்புக்களை நிறுத்தியிருப்பது தொடர்பான கவனயீர்ப்புத் தீர்மானம் ஆகியவற்றின் மீது பதிலளித்த போதே எஸ்.எம்.கிருஸ்ணா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பான கவனயீர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் ரி.ஆர்.பாலு,

“1974ம் ஆண்டு இந்திய – சிறிலங்கா அரசுகளுக்கு இடையில் கச்சதீவு தொடர்பான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.

அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஸ்வரன்சிங், கச்சதீவில் மீன்பிடிப்பதற்கும் கப்பலைச் செலுத்துவதற்கும் இந்தியாவுக்கு உரிமையுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த உடன்பாட்டின் படி தான் கச்சதீவு சிறிலங்காவின் கைகளுக்குச் சென்றது.அங்கு மீன் பிடிக்கவும் வலைகளை காயப் போடுவதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளது.

ஆனால், கச்சதீவில் மீன்பிடிக்க முடியாத நிலை இந்திய மீனவர்களுக்கு உள்ளது, சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கச்சதீவை மீளப் பெறுவதற்கும், அங்கு மீன்பிடிக்கும் மீனவர்களை பாதுகாப்பதற்கு கடற்படையின் ரோந்தை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று ரி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா,

“ இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா வழமைக்கும் அதிகமான ஈடுபாடு காண்பிப்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை நாம் நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்.

இந்தியாவின் பிராந்திய எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் மீனவர்களின் நலன்களைப் பேணவும் இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று சபைக்கு உறுதியளிக்கிறேன்.

ஆனால் கச்சதீவு உடன்பாட்டை மீளப் பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது.

இரு நாடுகளினதும் அரசுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட கண்ணியமான ஒரு உடன்பாட்டை கைவிட்டு நாம் பின்நோக்கிப் போக முடியாது.

சிறிலங்கா ஒரு நட்பு நாடு. அதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.

வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் தற்போது கொழும்பில் இது தொடர்பாக பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஒக்ரோபரில் நானும் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளேன். அப்போது மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக பேசவுள்ளேன்“ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, சீனாவின் அதிகரித்து வரும் அக்கறைகள் குறித்து எஸ்.எம்.கிருஸ்ணா எதையும குறிப்பிட்டுக் கூறவில்லை.

ஆனால் சிறிலங்காவிலும் இந்து சமுத்திரத்திலுள்ள ஏனைய நாடுகளிலும் அதிகரித்து வருகின்ற சீனாவின் திட்டங்களையே அவர் அவ்வாறு கூறியிருப்பதை தெளிவாகவே புரிந்து கொள்ள முடிவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.