வன்னி மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றமையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு!

வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வன்னிமக்கள் போரால் பேரவலத்தில் இருந்து இன்னமும் மீளாத நிலையில் அந்த மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை இந் நிலையில் அவர்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றோம்.

எமது மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்தமண்ணில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் அளவிடமுடியாத பல்லாயிரம் உயிர்கள் சிதைக்கப்பட்டு மீண்டும் தமது வாழ்க்கையை பழைய நிலைக்குக் கொண்டு செல்ல பல பத்தாண்டுகளைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் போர் மூலம் அழிந்தவை போக, எஞ்சிய சொத்துக்களையாவது மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற உரிமையுடன் கூடிய ஏக்கம் அந்த மக்களிடத்தில் காணப்படுகின்ற நிலையில், தமது சொத்துக்கள் தமது பகுதிகளில் இருந்து வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் அவர்கள் பல்வேறு தடைவைகள் எம்மிடம் முறையிட்டிருந்தனர்.

தமக்குச் சொந்தமான கால்நடைகள், வீட்டுத் தளபாடங்கள், உபகரணங்கள், இயந்திரங்கள், அவற்றின் உதிரிப்பாகங்கள், வாகனங்கள் உட்பட்ட பல கோடிக்கணக்கான பொருட்கள் வன்னியில் இருந்து அகற்றப்படுவதாகவும், அவற்றையாவது தடுத்து நிறுத்துமாறும் அந்த மக்கள் எம்மிடம் வினயமாகக் கேட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும், இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கும் நாங்கள் கொண்டு வந்திருந்தோம். இவை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக எமக்கு வழமைபோலவே வாக்குறுதிகள் அரச தரப்பினால் வழங்கப்பட்டிருந்தன.

ஆனாலும், அந்த நடவடிக்கை நிறுத்தப்படவில்லை.

இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டம், விசுவமடுப் பகுதிக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த நாம், றெட்பானாப் பகுதியில் வியாபாரத்திற்காகத் தயார் செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட பொருட்களைக் கண்ணுற்றோம். அவற்றினை புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளோம்.

விசுவமடு றெட்பானா சந்திப்பகுதியில் பாரிய தடுப்பு போடப்பட்டு அதற்கு அப்பால் செல்லவிடாமல் குமாரசுவாமிபுரம் கிராம மக்கள் மூன்று மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்ற மக்களின் சொத்துக்கள், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவந்தே சேர்க்கப்படுகின்றன என்று அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.

மக்களின் சொத்துக்கள் சேர்த்துவைக்கப்பட்டுள்ள மூன்று இடங்களை நாங்கள் நேரடியாகப் பார்வையிட்டோம். வீட்டுத்தளபாடப் பொருட்கள், வாகனங்கள், உழவியந்திரங்கள், இருசக்கர உழவியந்திரங்கள், மின்பிறப்பாக்கிகள், உந்துருளிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதனப்பெட்டிகள், வாகனங்களின் பெறுமதி வாய்ந்த உதிரிப்பாகங்கள், வீட்டுக் கதவுகள், அலுமினியப் பிற்றிங் பொருட்கள் என பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான பொருட்கள் தயார் நிலையில் இருக்கின்றமையை நாங்கள் நேரடியாகக் கண்ணுற்றோம்.

விற்பனைக்காகப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருந்த ஒருவரைச் சந்தித்தோம். அவர் தான் யாழ்ப்பாணம் ஐந்து இலாம்படிச் சந்தியில் வசிப்பதாகவும், தனது பெயர் எஸ்.எம்.நௌபர் என்றும் தெரிவித்தார்.

தாம் மட்டுமல்ல இன்னும் பலரும் நாள் ஒன்று சாராசரி நான்கு லொறிகளில் வன்னிப் பகுதிகளில் இருந்து பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் தெரிவித்த அவர், மக்கள் செல்ல அனுமதிக்கப்படாத பகுதிகளில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் தமக்கு தரப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறியதைப் போன்று நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்குவரையான லொறிகளில் வன்னிமக்களின் சொத்துக்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றமையை தாமும் அவதானிப்பதாக அங்கிருக்கும் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இருந்து பரந்தன் சந்திக்கு வரும் வரைக்கும் நான்கு இடங்களில் ‘இரும்பு, அலுமினியம், பித்தளை, செப்பு போன்ற பொருட்கள் கொண்டு செல்வதற்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது’ என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

எமது வாகனத்தினை மட்டும் மூன்று தடைவைகள் இடைமறித்து எமது விபரம் குறித்து கேட்டதன் பின்னரே அனுமதித்தார்கள். இந் நிலையில் அங்கிருந்து பெருமளவான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கின்ற மக்களும், குறித்த பொருட்களை ஏற்றிச் செல்லும் வியாபாரிகளும் எம்மிடம் தெரித்தனர்.

எனவே இந்தச் சம்பவங்களுடன் முடிவுகளை எடுக்கும் நிலையில் இருக்கும் அதிகாரிகளும் தொடர்பு பட்டிருக்கலாம் என்றே நாம் கருதுகின்றோம்.

குறித்த வியாபார நடவடிக்கையில் தருமபுரம் பகுதியைச் சேர்ந்த ‘ஜீவன்’ மற்றும் ‘நஜீ’ உட்பட்ட நபர்கள் ஈடுபட்டுவருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவங்களில் முஸ்லிம் மற்றும் தமிழ் வியாபாரிகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டு வன்னி மக்களுக்குச் சொந்தமானவற்றில் எஞ்சியிருப்பவற்றைச் சூறையாடிச் செல்கின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது.

எமது மக்களுக்குச் சொந்தமான, அவர்களின் உழைப்பின் பலனாய் அவர்கள் சேமித்த அவர்களின் பரம்பரை பரம்பரையான சொத்துக்களை அவர்களில் இருந்து பிடுங்கி எடுக்கும் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், இதற்கான அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று சர்வதேசத்திடமும் வேண்டிநிற்கின்றோம்.

வன்னி மக்கள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிப்பதன் மூலம் இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியும் என்றே நாம் கருதுகின்றோம்.

நன்றி,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – பேச்சாளர் சுரேஷ; பிறேமச்சந்திரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.