மேர்வின் சில்வா குற்றமற்றவர் ‐ சிங்கள மரபின் அடிப்படையிலான மரத்தில் கட்டித் தண்டிக்கும் தண்டனையை நானே ஏற்றுக் கொண்டேன்

முன்னாள் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா குற்றமற்றவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு தீர்மானித்துள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்டன.

அண்மையில் களனி பிரதேசத்தில் வைத்து சமுர்த்தி அதிகாரியொருவருரை அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டி தண்டித்தார்.

எனினும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றாத சமூர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதியளவு ஆதாரங்கள் கிடையாதென ஒழுக்காற்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்கு பற்றாத குற்றத்திற்காக தமது விருப்பத்தின் பேரில் மரத்தில் கட்டப்படதாக தண்டனை அனுபவித்த சமுர்த்தி அதிகாரி வாக்கு மூலமளித்துள்ளார்.

ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதற்காக தாம் இவ்வாறு சிங்கள மரபின் அடிப்படையிலான மரத்தில் கட்டி தண்டிக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா கட்சியின் எந்தவொரு விதியையும் மீறவில்லை என கட்சியின் ஒழுக்காற்று குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, குறித்த சமுர்த்தி அதிகாரிகயை தண்டித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை இலங்கையின் சகல முன்னணி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.