இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்த அரசாங்கம் இதுவரையில் செய்தவை என்ன ? நிருபமா ராவ் கேட்டு சொல்ல வேண்டும்

விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் ஓய்ந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு இந்த அரசாங்கம் உருப்படியாக செய்திருப்பவை எவை என்ற பட்டியலை இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அரசாங்க தலைவரிடம் கேட்டுவாங்கி தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இந்திய அரசாங்கத்தை தவிர்த்துவிட்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும், போரினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள் குடியேற்றத்தையும் முன்னெடுக்க முடியாது. அதேவேளையில் இந்திய அரசு, இலங்கை அரசுடனும், தமிழ் கட்சிகளுடனும் தொடர்ச்சியாக பேச்சுக்ககளை நடத்திக்கொண்டிருந்தாலும் நடைமுறையில் எதிர்பார்க்கின்ற முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியிலே நிலவுகின்ற கருத்தாகும். இதை இலங்கை வந்துள்ள இந்திய அரசின் வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அறிந்துகொள்ள வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
 
தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு அரசியல் தீர்வை கொண்டுவரும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாக நம்புவதற்கு ஒரு காரணத்தைக்கூட எம்மால் காணமுடியில்லை. 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்வோம் என இலங்கையில் இருந்து இந்திய ஊடகங்களுக்கு சொல்லிக்கொண்டே நடைமுறையில் இருக்கின்ற உரிமைகளையும் அபகரிக்கும் காரியங்களையே இந்த அரசாங்கம் ஆற்றிக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்து அவசர அவசரமாக மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தியது.

ஆனால் வட மாகாணத்தை மீட்டெடுத்து அங்கு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவை நடத்தப்பட்ட பிறகும்கூட வட மாகாணத்தில், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அங்கு அரசாங்க கூட்டணியினால் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்ற காரணத்திற்காக அந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றது.

அங்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தி போரினால் அகதிகளாக்கப்பட்;டுள்ள மக்களை மீள குடியேற்றும் பணிகளை அந்த மாகாணசபைத்த நிருவாகத்திற்கு வழங்கலாம். இதை ஏன் இந்த அரசாங்கத்திற்கு இதுவரையில் செய்ய முடியவில்லை? இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளையும், கட்டிதரப்போவதாக கூறப்படும் வீடுகளையும் வட மாகாணசபையுடன் இணைந்து செய்வதுதான் பொருத்தமானதாகும்.

தற்போது வட மாகாணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் நடைபெறவில்லை. இந்நிலைமையை மாற்றி அமைப்பதற்கு இன்றைய அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள 13வது திருத்தத்தை பயன்படுத்தி வட மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும். இன்றைய சூழ்நிலையில் குறைந்தப்பட்சமாக இதைத்தான் செய்ய முடியும். இதற்காவது இந்த அரசாங்கத்தை இணங்க செய்வது இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த செய்தியை இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் புதுடில்லிக்கு எடுத்துசெல்லவேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.