ஏ-9 வீதி புனரமைப்பிற்கு சீனா 350 கோடி ரூபா நிதி உதவி!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கிணங்க வட மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான பாரிய வீதிப் புனரமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைவதுடன், நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவியாக அமையுமென அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியானது 153 கி.மீ.நீளமாகும். கல்கமுவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வீதியானது நவீனமயப்படுத்தப்படும்.

அத்துடன் இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதி, புத்தூர் மீசாலை வீதி, யாழ்ப்பாணம் பளை வீதி என்பனவும் புனரமைக்கப்படவுள்ளது.

மேலும் முல்லைத்தீவு கொக்கிளாய் புல்மோட்டை வீதி, ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு புளியங்குளம் வீதிகளும் வெவ்வேறான திட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.

இதற்கான மொத்த செலவினத்தில் 85% சீன அரசு வழங்கவுள்ளது. மீதி 15% செலவினத்தை இலங்கை அரசு செலவிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.