அரசியலமைப்புத் திருத்தம், தொடர்பில் நீண்ட கதை சொல்கிறது அரசு!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தமானது ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிடக் கூடிய தடவைகளின் வரையறையை நீக்குவதாகக் கொண்டு வரப்படுகிறதே தவிர இது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான ஏற்பாடு அல்ல என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கருத்துகள் வெளியிடப்பட்டன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து வெளியிடுகையில்;

பிரதமரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் 3 பிரதான விடயங்கள் அடங்குகின்றன.

முதலாவதாக இந்தத் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் 31 (2) சரத்து நீக்கப்படுகிறது. அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த ஒருவர் மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிட முடியாதென அந்த சரத்து விதந்துரைக்கிறது.

எனவே இதை நீக்கியதன் பின்னர் ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் ஒருவரை அப்பதவிக்குத் தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கே இருக்கிறது. இந்தத் திருத்தத்தின் மூலம் மக்களின் வாக்குரிமை விரிவாக்கப்பட்டிருக்கிறதே தவிர மட்டுப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் மக்களின் வாக்குரிமைக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தன்னை அர்ப்பணித்து நாமிருக்கும் காலத்தில் சுதந்திரக் கட்சியையும் விசேட வெற்றியுடன் நிலைப்படுத்திய ஜனாதிபதிக்கு 2 தடவைகளுக்கும் மேலாக அப்பதவியில் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்பதே சுதந்திக் கட்சியின் தெளிவான நோக்கம். இதில் இரகசியம் ஒன்றுமில்லை என்றார்.

அடுத்ததாக 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் வரும் அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக பாராளுமன்ற பேரவை கொண்டு வரப்படுவதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அரசியலமைப்புப் பேரவையைப் பொறுத்தவரையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பிரதிநிதியொருவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருவரினதும் பிரேரிப்பின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 5 பிரதிநிதிகள், சிறு கட்சிகளினால் பிரேரிக்கப்படும் பிரதிநிதி ஒருவர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் இதில் அங்கம் வகிக்க வேண்டுமென்ற ஏற்பாடே தற்போதைய அரசியலமைப்பில் இருக்கிறது.

எனினும் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தில் அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் பாராளுமன்றப் பேரவை 5 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்குமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர், எதிர்க்கட்சித் தலைவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் பாராளுமன்ற பேரவையின் உறுப்பினர்களாக இருப்பர்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களே பிரதமரினதும் எதிர்க்கட்சித் தலைவரினதும் பிரதிநிதிகளாக இருப்பர். சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசியலமைப்புப் பேரவைக்கான பிரதிநிதியொருவரை நியமிப்பதில் சிறு கட்சிகள் விடயத்தில் பிரச்சினை நிலவியதால் அந்தப் பேரவையை நியமிக்க முடியாமலேயே போனது.

எனவே நாம் எமது ஆட்சிக் காலத்தில் கண்ட அனுபவத்தைக் கொண்டே நடைமுறைச் சாத்தியமான வகையில் அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக பாராளுமன்றப் பேரவையைக் கொண்டு வருகிறோம்.

அது மட்டுமல்லாது, அரசியலமைப்பின் புதிய திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றப் பேரவைக்கான உறுப்பினர்களைப் பிரேரிக்கக் கோரி ஜனாதிபதி அழைப்பு விடுத்த ஒரு வார காலத்துக்குள் உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படவில்லை என்றால் அந்தப் பேரவையை ஜனாதிபதியால் நியமிக்க முடியுமென்ற ஏற்பாடும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

முன்னர் இம் மாதிரியான ஏற்பாடுகள் எதுவுமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்படுபவர்களை நீக்குவதற்கான அதிகாரங்களை வழங்குவது புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூன்றாவது பிரதான விடயமாக அமைந்திருப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

ஆணைக்குழுக்களுக்கு நியமித்த பின்னர் நீக்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது இல்லை.

எனவே, ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டவரை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமொன்றின் மூலம் நீக்க முடியும் அல்லது நீக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவது எனும் ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.