தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிநாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவரும் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் கலைப்பார்களா?

கடந்த ஆண்டு மே-19ம் திகதியுடன் தமிழ்மக்களது பாதுகாப்பு கவசமாக விளங்கிய ஆயுதங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்ய முடிவெடுத்தமையும் அதன் பின்னர் இன்றுவரை ஓய்வின்றி மக்களை குளப்பும் வகையிலான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது எமது இனத்தின் தூர்பாக்கியமாகும்.

தமிழீழத் தேசியத் தலைமை வெளிப்படாது உள்ள நிலையை சாதகமாக பயன்படுத்தி தமிழின விரோதிகள் எதிரிகளின் கைப்பாவையாக மாறி உலகத்தமிழரை குழப்பும் முயற்சியில் மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தன்களாக அவதாரம் எடுத்து ஈடுபட்டுவருவது வேதனை மிக்கதாகும்.

அண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளராக செயற்பட்டு வந்த கே.பி. அவர்களின் பெயரில் பல அடிப்படையற்ற முன்னுக்கு பின் முரனாண தகவல்கள் உள்ளடங்கிய தொலைபேசியூடான உரையாடலை ஆதாரமாக கொண்டு வெளியிடப்படுவதாக கூறி வெளியிடப்பட்டுவரும் வெளியீடுகள் உலகத் தமிழரை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கிவருகின்றது.

அதனை சில ஊடகங்கள் பொறுப்பற்றவிதமாக வெளியிட்டு மக்களை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கிவருகின்றமை கண்டிக்கத்தக்கதாகும். அதைவிட தற்போது “தமிழீழம் இனிமேல் சாத்தியமில்லை என்றும், மக்களுக்கு இது தொடர்பாக விளக்கமில்லை என்றும்” தொலைபேசி உரையாடல் ஒன்றில் வி.உருத்திரகுமாரன் கூறியமை தொடர்பான ஒலிப்பதிவு வடிவம் ஒன்று, கடந்த சில நாட்களாக இணையத்தளங்களிலும், மின்னஞ்சல் வாயிலாகவும் உலகத் தமிழர்களை வலம் வந்த வண்ண முள்ளது.

இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் அமைப்பாளரான உருத்திரகுமாரனோ அல்லது அதன் பொறுப்பு மிக்கவர்களோ தகுந்த விளக்கங்களை மக்கள் முன் வைக்கவேண்டிய வரலாற்றுக்கடமை உள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கருத்தில் எடுத்து குழப்பத்திற்குள்ளாகியிருக்கும் தாயக, புலம்பெயர் உறவுகளை தெளிவுபடுத்துமாறு ஈழதேசம் மிகுந்த தயவுடன் கேட்டுக் கொள்கின்றது.

நன்றி: ஈழதேசம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.