என்னை படிக்க வையுங்கள், அண்ணாமாரை கண்டுபிடியுங்கள்! வன்னிப் போரில் காலை இழந்த சிறுமி உருக்கம்

நெருடல் வாசகர்களுக்கு,

இந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக புலம்பெயர் தமிழீழத்தில் இருந்து ஒருவர் (அவரின் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) பொறுப்பெடுத்துள்ளார்.
 
இந்த சிறுமியை போலவே இன்னும் எத்தனையோ சிறுவர்கள் சிதறடிக்கப்பட்டுளார்கள், அவர்கள் அனைவரையும் நெருடல் விரைவில் புலம்பெயர் தமிழீழத்திற்க்கு எடுத்து வரும்.
 
இந்த சிறுமிக்கு வழங்கிய ஆதரவை போலவே உங்கள் அனைவரின் ஆதரவும் எம் மக்களுக்கு இருக்கும் என்று நம்புகின்றோம்.
 
நன்றி
நெருடல் குழுமம்

“என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்.” இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. வயது 14.

தற்போது தரம் 10 இல் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படிக்கின்றார். கடந்த வருடம் யுத்த இடப் பெயர்வின்போது காணமல் போன அண்ணன்மார். வயதான அப்பா.

அப்பாவுக்கு வேலை இல்லை. மன ரீதியாகவும் குழம்பிப் போயுள்ள பெற்றோர். இத்தனை இன்னல்கள் இவரைச் சுற்றி நிற்க ஆட்டோவில்தான் பள்ளிக்கு சென்று வருகின்றார் இச்சிறுமி. மாதம் 1000 ரூபா வரை இப்போக்குவரத்துச் செலவு.

வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி பிள்ளையை ஆட்டோவில்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற நிலை பெற்றோருக்கு. அரசின் உதவியும் இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் மனிதாபிமானமும் இல்லை.வெளிநாட்டு நிதியும் இல்லை.

அப்படியாயின் இந்த பிஞ்சு ஏன் பாடசாலைக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்?. அவருடைய கால்கள் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் சிக்கி விட்டன. ஒரு கால் முழங்காலுடன் துண்டாடப்பட்டு விட்டது. மற்றக் காலிலும் பாதிப்பு. ஆனால் கல்வி கற்று பெரிய நிலைக்கு வருவேன் என்கிற சபதத்தில் அச்சிறுமி.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிற பழமொழியை உணர்ந்து பிள்ளையை எப்பாடு பட்டும் படிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் பெற்றோர். ஆனாலும் சிறுமியும் சபதமும், பெற்றோரின் வைராக்கியமும் எவ்வளவு காலத்துக்குத்தான் நீடிக்க முடியும் என்கிற சந்தேகத்தைப் பெரிதாகக் காட்டுகிறது அக்குடிசையில் குடியிருக்கும் வறுமையின் வெறுமை.

பெற்றோருக்குப் பின் இச்சிறுமியை எவர்தான் ஆதரிக்கப் போகின்றார்கள் என்பதும் பதில் இல்லாத கேள்விதான்.

கூடப் பிறந்த அண்ணன்மார் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டால் என்றென்றைக்கும் காப்பாற்றுவார்கள் தானே? என்றால் அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கடந்த 15 மாத காலமாக இல்லை.பாவம் காத்திருப்புக்களும் கனவுகளும்தான் இக்குடும்பத்தில் தொடர்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.