நிரூபமா விஜயத்தால் ஈழத் தமிழருக்குப் பலனேதுமில்லை: திருமாவளவன்

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் அங்குள்ள தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“திமுக கூட்டணியே எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் அறியாமையால் சில கட்சிகள் அவதூறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை.

திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு அமையும். மீண்டும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும்.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, தேவையில்லாமல் அதிகளவு பணத்தைக் கொடுத்து ஆட்களைத் திரட்டுகிறார்கள். வடக்கு மாவட்டங்களில் கூட்டணி வலிமை பெறுவதற்கு பாமக வரவு பயன்படும். எனவே திமுக கூட்டணியுடன் பாமகவும் இணைய வேண்டும்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.