“கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை” – யாழ்.மக்கள் முன் நிருபமா!

கடந்தகாலத்தை மறந்து விட்டு எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள் என்று யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் குடாநாட்டு மக்கள் கூறுபவற்றை செவிமடுக்கவும் காயங்களை ஆற்றுப்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்.நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள்.

கடந்த காலங்களில் இடம்பெற்றவை எதனையும் நான் நிராகரிக்கவில்லை. இதேவேளை உங்களது நலன்புரி நடவடிக்கைகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் உணர வேண்டும். கடந்த காலங்கள் குறித்து சிந்திப்பதற்கு நேரமில்லை. உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்திக் கேட்கிறேன்.

இந்தியா உங்களது நெருக்கமான அயல்நாடு, நட்பு நாடு, கடந்த காலங்களில் பல விடயங்கள் நடந்திருக்கலாம். அதனை மறந்து எதிர்காலம் குறித்துச் சிந்தியுங்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் எவையும் உங்களது சிறந்ததொரு எதிர்காலத்திற்கு உதவப்போவதில்லையெனத் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க சொந்த இடங்களில் மீளக் குடியேற முடியாமல் கவலையும் விரக்தியும் அடைந்துள்ள, வன்னியில் ஏ9 வீதியை அண்டிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் ஆறுதலளித்தள்ளதுடன், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற, வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதே தனது வருகையின் முக்கியமான நோக்கம் என்றும் நிருபமா கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களை அவதானிக்கவும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆராயவுமே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளேன்.

யுத்த நடவடிக்கைகள் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் அமைதியுடன் வாழ வேண்டுமென்பதே எமது விருப்பமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதேநேரம் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் நிருபமா ராவ் கலந்துகொண்டுள்ளார்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாயக்கிழமை காலை நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தி, உதவித் தூதுவர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் மற்றும் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.சார்ள்ஸ், வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி கமல் குணவர்தன உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அதேநேரம், கிளிநொச்சி மாவட்டம் திருமுருகண்டி, சாந்தபுரம், இந்துபுரம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் 20 பிரதிநிதிகளும் இந்த விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர். திருமுருகண்டி, சாந்தபுரம், இந்துபுரம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அவர்களின் சொந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.

இக் காணிகளுக்குரியவர்களுக்கு வேறிடங்களில் காணிகள் தரப்பட்டு குடியமர்த்தப்பட வசதிகள் வழங்கப்படுமென்று கூறப்படுகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அப்பிரதேச மக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்திய வெளிவிகாரச் செயலாளர் நிருபமா ராவிடம் மகஜரொன்றையும் நேற்றைய சந்திப்பின் போது கையளித்துள்ளனர்.

அதேநேரம், குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சார்பில் அங்கு கருத்து வெளியிட்ட சக்திவேல் என்பவர் இந்திய பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது; சுமார் 4050 வருடங்களாக குறிப்பிட்ட பிரதேசங்களில் வசித்து வரும் எம்மை வேறிடங்களுக்கு சென்று குடியேறுமாறு படையினரால் நிர்ப்பந்திக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது காணிகளில் பனை,தென்னை உட்பட பயன்தரும் வளங்கள் பலவுள்ளன. நாம் வாழ்ந்த பூமியை விட்டு இடம்பெயர எம்மால் முடியாது. எமது சொந்த வாழ்விடத்தில் மீளக்குடியேற அனுமதிக்க இந்திய அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அவதானிக்கவும் அதற்கான உதவிகளை வழங்குவது தொடர்பாகவுமே இலங்கைக்கு வந்துள்ளேன்.

என்னிடம் சுட்டிக் காட்டிய மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அதற்கான அனைத்து உதவிகள் ஒத்துழைப்புகளையும் இந்திய அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாமல் இருந்தபோதும் விசேடமாக இச் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.