எந்த நேரத்திலும் மரணம் சாவின் விளிம்பில் சகோதரிகள்

இங்கிலாந்தை சேர்ந்த அக்கா, தங்கைகள் குளோ (13), கர்ட்னி (12), மெலிசா மெக்அலிஸ்டர் (8). துள்ளி விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள். இப்போது.. எப்போது வேண்டுமானாலும் மரணம் வரும் என்ற சூழ்நிலையில் நாட்களை நகர்த்தி வருகின்றனர். 10 ஆயிரத்தில் ஒருவரை தாக்கக்கூடிய கொடிய இதய நோய் இந்த 3 சிறுமிகளையும் பாதித்திருப்பது இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதயத் துடிப்பு ஒழுங்கற்று இருக்கும் நோய் ‘லாங் க்யூ.டி. சிண்ட்ரோம்’ எனப்படுகிறது. 10 ஆயிரத்தில் ஒருவருக்குதான் இந்த பாதிப்பு இருக்கும். இதயத்தில் திடீர் படபடப்பு ஏற்படும். அடிக்கடி மூச்சு திணறும். குணப்படுத்த முடியாது. இங்கிலாந்தில் ஒரே வீட்டில் அக்கா, தங்கைகள் மூன்று பேருக்கும் இந்த நோய் வந்ததுதான் சோகம். நடு தங்கை கர்ட்னிக்கு 5 வயது ஆகும்போது திடீரென ஒருநாள் மூச்சு திணறி மயங்கி விழுந்தாள். கிளாஸ்கோ நகரில் உள்ள ராயல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். பக்கவாதமாக இருக்கலாம் என்று டாக்டர்கள் முதலில் கருதினர். இசிஜி சோதனை செய்ததில், லாங் க்யூ.டி. என தெரியவந்தது.

இது பரம்பரை வியாதி என்பதால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்தனர். சோதனை செய்ததில், மற்ற 2 சகோதரிகளுக்கும் லாங் க்யூ.டி. இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடைசி குழந்தை மெலிசா ஒரு மாத குழந்தையாக இருந்தபோது 2002&ல் அவர்களது அம்மா ஷரோன் (23) இறந்தார். அவரும் இதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம். அவரிடம் இருந்தே குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றியுள்ளது என்று டாக்டர்கள் கூறினர்.

இதுபற்றி அவர்களது அப்பா ஸ்டீபன் கூறியதாவது: துள்ளி விளையாடிய 3 குழந்தைகளும் கொடிய இதய நோயால் பாதிக்கப்பட்டு மரண நாளை எண்ணுவது மிகுந்த வேதனையாக உள்ளது. அம்மாவும் இதனால்தான் இறந்தார் என்பது குழந்தைகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தூக்கத்தில்கூட மாரடைப்பு வரலாம் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். பக்கத்தில் இருந்து 3 பேரையும் பார்த்துக் கொள்கிறேன்.

படம் வரைவது, புத்தகம் படிப்பது, நன்கு ஓடியாடி விளையாடுவது என் குழந்தைகளுக்கு பிடிக்கும். ஓடுவது, தாண்டிக் குதிப்பது போன்றவை கூடாது என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். தங்கள் நிலை என்ன என்பது அவர்களுக்கு புரிகிறது. பத்திரமாய் பள்ளிக்கு போய் வருகிறார்கள். எந்நேரமும் இறக்கலாம் என்ற சூழ்நிலையிலும் அவர்களது புன்சிரிப்புகளும் ஜாலி பேச்சுகளும் மாறவில்லை. சந்தோஷமாய் இருக்கிறார்கள். என்னால்தான் அப்படி இருக்க முடியவில்லை. இவ்வாறு சொல்லி கலங்கினார் ஸ்டீபன்.

நடு தங்கை கர்ட்னியின் இதய துடிப்பை அறியும் கருவி கடந்த ஏப்ரலில் பொருத்தப்பட்டது. மற்ற இருவருக்கும்  விரைவில் பொருத்தப்பட உள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.