வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 89,000 பெண்கள் கணவனை இழந்துள்ளனர்

சிறீலங்காவில் நடைபெற்ற போரில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 89,000 பெண்கள் கணவனை இழந்துள்ளதாகவும், அவர்களில் 25,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி செல்வராஜா தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சபையின் கூட்டத்தில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் நடைபெற்ற இயற்கை அழிவுகளை விட போரினாலே அதிகளவான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் நிறைவுபெற்று 16 மாதங்கள் கடந்த நிலையிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிறீலங்கா அரசு எதனையும் மேற்கொள்ளவில்லை.

இந்த பெண்கள் பாதிப்படைந்ததற்கு சிறீலங்கா இராணுவமே பிரதான காரணம். அவர்களின் கணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல்போயுள்ளனர், இளம்பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகும் அதேசமயம், பலர் கைது செய்யப்பட்டு தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுடன் தாய்மார் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காத சிறீலங்கா அரசு அவர்களை விடுவிக்கவும் மறுத்து வருகின்றது.

மாகாண அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனப்பிரச்சனையை தீர்ப்பதாக கூறிக்கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 23 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக சிறீலங்கா அரசு அதன் அதிகாரத்தை ஒரு இரவில் வர்த்தமாணி அறிவித்தல் மூலம் பறித்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.