பொன்சேகாவினைப் போல சந்திரிகாவிற்கு எதிராகவும் சட்டநடவடிக்கை – ஆயத்தமாகிறது மகிந்த அரசு?

சிறிலங்காவினது முன்னாள் குடியரசு அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனத் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கொழும்பினைத் தளமாகக் கொண்டியங்கும் ‘லங்கா ஈ-நியூஸ்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த ஆண்டினது முதல் பகுதியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சவிற்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக எவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ அவ்வாறு சந்திரிகாவிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம்.

சந்திரிகா சிறிலங்காவினது அதிபராகவும் நாட்டினது நிதி அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘லுக்கோ மோட்டிவ்’ உடன்பாடு, ‘எமிறேற் ஏயார்பஸ்’ உடன்பாடு மற்றும் ‘இவான் இன்ரநாஷனல்’ உடன்பாடு போன்றன தொடர்பான தகவல்களை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திரட்டி வருகிறது.

குறிப்பிட்ட இந்த உடன்பாடுகள் சட்ட ரீதியாகவோ அன்றி முறையாகவோ இடம்பெறவில்லை என்றும் அவற்றுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகள் பரிந்துரைத்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

அமைச்சரவையின் அங்கீகாரம் அன்றி அவர் மேற்கொண்ட உடன்பாடுகள் தொடர்பாகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இடம்பெற்ற உடன்பாடுகளில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு ராஜபக்சவின் மீதும் குற்றம் சுமத்தப்படலாம் என்பதாலேயே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படாத உடன்பாடுகள் தொடர்பில் மாத்திரம் ஆராயப்படுகின்றன. சந்திரிகாவின் அமைச்சரவையில் மகிந்த ராஜபக்சவும் அங்கம் வகித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மகிந்த அரசாங்கத்தின் சர்வாதிகார முறையிலமைந்த ஆட்சிமுறை தொடர்பாகவும் ஆட்சியதிகாரத்தில் குடும்ப ஆதிக்கம் தொடர்பாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதன் விளைவாகவே இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் முன்னாள் அதிபர் குமாரதுங்கவின் செயற்பாடுகளை நிறுத்துவற்கு அல்லது தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எழும் ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்கு இதுபோன்ற முனைப்புகள் அவசியமானது என்ற அவரது ஆலோசகர்களின் ஆலோசனையின் பெயரிலேயே சந்திரிகாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மகிந்த முடுக்கிவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.