சிறிலங்காவினைச் சேர்ந்த பணிப்பெண்ணின் உடலில் ஆணி – சவுதி அதிகாரிகள் மறுப்பு

சவுதி அரேபியாவில் குறிப்பிட்ட ஒருவரது வீட்டில் தான் பணிப்பெண்ணாக வேலைசெய்த போது அவர்கள் இரும்பு ஆணிகளை உடலினுள் சொருகினார்கள் என்ற சிறிலங்காவினைச் சேர்ந்த பணிப்பெண்ணின் குற்றச்சாட்டினை சவுதி அதிகாரிகள் முற்றாக மறுத்திருக்கிறார்கள்.

கடந்த மாதம் ஆரியவதி என்ற இந்தப் பணிப்பெண் சவுதியிலிருந்து திரும்பிய பின்னர் அவரது உடலிலிருந்து 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் தாங்கள் அகற்றியிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கால் மற்றும் நெற்றி பகுதிகளிலிருந்து இவை அகற்றப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் வெளிநாட்டு வேலையாட்களுக்குப் பொறுப்பான சவுதி அரசாங்கத் திணைக்களத்தின் தலைவர் இந்தக் குற்றச்சாட்டினை முற்றாக மறுக்கிறார். இதுவிடயம் தொடர்பில் கடந்த செவ்வாயன்று அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஆரியவதியினது இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இவர் கூறினார்.

“இந்த முழுமையான கதையுமே ஆதாரமற்றது. சவுதியில் பணிசெய்யும் சிறிலங்காவினைச் சேர்ந்த தொழிலாளர்களின் அமைப்புக்களின் மிரட்டும் ஒரு செயலேயன்றி வேறெதுவும் இல்லை” என அல் பதா கூறுகிறார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இதுபோன்ற பணியாளர்களுக்கான நடைமுறைகள் மற்றும் ஊதியக் குறைப்பு ஆகியவற்றை சவுதிக்குப் பல்வேறுபட்ட பணியாளர்களை அனுப்பும் இந்த நிறுவனங்கள் நிராகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற எந்த முறைப்பாடுகளும் விமான நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட இந்தப் பணிப்பெண்ணால் தங்களிடம் முன்வைக்கப்படவில்லை என சவுதியின் விமானப் போக்குவரது அதிகாரசபையின் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் அப்துல் காடி அபாரி கூறுகிறார்.

சவுதி அரேபியாவில் தான் பணிசெய்த வீட்டார் தண்டனையாக இரும்பு ஆணிகளை சூடாக்கிவிட்டுத் தனது உடலினுள் செலுத்தியதாக 49 வயதான ஆரியவதி கூறுகிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.