புற்றுநோய் எதிர்ப்புக்காக கனேடியத் தமிழர்கள் நிதி சேகரிப்பு

புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பாரியளவில் நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றை கனடாவாழ் தமிழ் சமூகத்தினர் முன்னேடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த, புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான நிதிசேகரிப்புக்காக ஸ்காபறோவின் மெட்றோபொலிட்டன் மையத்தில் இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்த ஏற்பாடாகி உள்ளது.

செம்படம்பர் மாதம் 5ம் திகதி நடாத்தப்பட இருக்கும் இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்குபற்றுவார்கள் என்றும் நூற்றுக்கணக்கான தமிழ் சமூகத்தினர் இதில் பங்குகொள்ளவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் ஏனைய சமூகத்தினரைப் போலவே கனடியத் தமிழ் சமூகத்தினரையும் அதிக அளவில் பாதித்திருப்பினும் புற்றுநோய் தடுப்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு குறைவானதாகவே உள்ளது.

எனவே, கனடியத் தமிழ் சமூகத்தினரிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் கருத்தாய்வுகளில் இந்த இசைநிகழ்ச்சியும் ஒன்றாகும்.

இந்த இசை நிகழ்ச்சி மூலம் பெறப்படும் அனைத்து நிதியும் கனடிய புற்றுநோய் அமைப்புக்கு வழங்கப்படும் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சி பாரதி இசைக் கலைப் பள்ளியினால் ஒழுங்கமைக்கப்பட்டு கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவில் நடாத்தப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஆண்டு புற்றுநோயின் தாக்கத்தினால் இந்தக் கலைப் பள்ளியின் நிறுவனர் பவதாரணி மதிவாசன் உயிரிழந்தார். இவர் கனடியத் தமிழ் சமூகத்தில் ஒரு முன்னணி இசை ஆசிரியராக விளங்கி வந்தார். இழப்பு என்னும் கருப்பொருளை மையமாக வைத்து நடாத்தப்படும் இந்நிகழ்ச்சியில். பவதாரணியின் துணைவரும் குழந்தைகளும் பங்கெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.