புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? – தாயகத்தில் இருந்து ஒரு குரல்

இப்பொழுது எனது கவலையெல்லாம் என்னவென்றால் புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதே. தமிழ் மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, இதற்கும் மேலாக கே. பியின் தலைமையிலான ஒரு குழு இன்னும் என்னென்னவோ பெயர்களில் புலத்தில் உள்ள தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது?  யார் உண்மையானவர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நிலத்தில் உள்ள மக்களுக்கு புலத்திலுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஊடாக ஓரளவு பண உதவி செய்தால் போதும் என்ற கருத்துத்தான் அங்கு நிலவுகின்றது என நான் நினைக்கின்றேன். இவ்வாறான உதவிகள் தான் இப்பொழுது நடைபெறுவதாகவும் நான் அறிகின்றேன். இதனோடு நிலத்திலுள்ளவர்களுக்கு புலத்திலுள்ளவர்கள் செய்கின்ற பணி முடிந்து விடுகின்றது.

அடுத்து புலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சர்வதேச அரசியல் மாற்றங்களினூடாக இப் போராட்டத்தை வென்றெடுக்கலாம் என புலத்திலுள்ளவர்கள் நம்புகின்றார்கள். இதற்கு எமது தேசியத் தலைவர் தமது மாவீரர் உரையில் இனி புலத்திலுள்ளவர்கள்தான் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். 

தமிழர்களின் போராட்ட சக்தி புலத்திலுள்ளது என்பது உண்மைதான். ஆனால் நிலத்தில் தமிழர்கள் வாழ்ந்தால் தானே நீங்கள் புலத்தில் போராடமுடியும்.

தமிழீழம் என்பது  என்ன? மண்ணும் மக்களும்தானே. இவையிரண்டுமே அழித்தொழிக்கப்பட்டால் தமிழீழம் என்பது வெறும் பேச்சிலும் காகிதத்திலும் மட்டுமே இருக்கும். பின்னர் யூதர்களைப்போல புலத்திலுள்ளவர்கள் தேசத்திற்காகப் போராடவேண்டும். 

யூதர்களின் பேராட்டம் இஸ்ரவேல் என்ற நாடாக உருவெடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

  1. யூதர்கள் தாம் வாழ்ந்த நாடுகளில் பொருளாதாரத்திலும் அறிவியலிலும் உயர்ந்த மட்டத்தில் இருந்தார்கள். தாம் வாழ்ந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் அறிவியற் துறையையும் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை யூதர்களிடம் இருந்தது. இதனால் தாம் வாழ்ந்த நாடுகளின் அரசாங்களினால் புறக்கணிக்கக்கப்பட முடியாத சக்தியாக யூதர்கள் இருந்தனர்.
    இன்று புலத்தில் வாழும் தமிழர்கள்  இவ்வாறான நிலையில் உள்ளனரா? அல்லது யூதர்களைப் போல புறக்கணிக்கப்படமுடியாத சக்தியாக எதிர்காலத்தில் வருவார்களா?
  2. இஸ்ரவேல் என்ற நாடு உருவாகியவுடன் உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் தமது தாயகத்தில் வந்து குடியேறினார்கள். இன்று புலத்தில் வாழும் தமிழர்கள் தாயகத்தில் வந்து குடியேறத் தயாராக உள்ளனரா?

என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு வினாக்களுக்கும் ஒரே பதில்தான் உண்டு. இல்லை என்பதே பதில். எனவே தாயகத்திலுள்ள மக்களும் மண்ணும் முக்கியமானது என்பதனை புலத்திலுள்ளவர்கள் உணரவேண்டும். இங்கு மக்களும் மண்ணும் பாதுகாக்கப்படும்போதுதான் புலத்தில் நடைபெறுகின்ற எந்தவொரு நடவடிக்கையும் வெற்றியளிக்கும். ஆனால் தாயகத்தில் நடைபெறுவது என்ன? எமது மண் இரண்டு வழிகளில் பறிபோகின்றது.

  1. அரசாங்கம் திட்டமிட்டமுறையில் காணிகளைப் பொதுத்தேவை என்ற பெயரில் சுவீகரிக்கின்றது. 1950ம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது இன்ற வட மாகாணத்தில்  நடைபெறுகின்றது.
  2. எம்மவர்கள் தமது காணிகளையும் வீடுகளையும் சிங்களவர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.  வீடுகளும் காணிகளும் மற்றும் வீட்டு உபகரணங்களும் விற்பனைக்கு உண்டு என்ற விளம்பரங்கள் அதிகளவில் பத்திரிகைகளில் அதிகளவில் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் இரண்டு வகையினர்.

  1. அனைத்துச் சொத்துக்களையும் விற்றுவிட்டு குடும்பத்தோடு புலம்பெயர்ந்து செல்பவர்கள்.
  2. குடும்பத்தோடு ஏற்கனவே புலம்பெயர்ந்து சென்றவர்கள் திரும்பிவந்து தமது சொத்துக்களை விற்றுவிட்டுச் செல்கின்றனர்.

இவ்வாறு விற்பவர்கள் கூடியவருமானம் கருதி சிங்களவர்களுக்கு தமது சொத்துக்களை விற்பனை செய்கின்றனர். எனக்குத் தெரியத்தக்கதாக யாழ்ப்பாணம் சோமசுந்தரம் லேனில் உள்ள ஒரு வீடு ஒரு சிங்கள ராணுவ அதிகாரிக்கு விறபனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இவ் வீட்டில் சில இராணுவத்தினர் குடியிருக்கின்றனர். இதுதான் இன்றைய யாழ்ப்பாண நிலை.

இன்று யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஏறத்தாழ ஒரு இலட்சம் இராணுவம் நிலைகொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்களில் 50000 பேரின் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டால் கூட ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என்ற கணக்கில் ஏறத்தாழ இரண்டு இலட்சம்பேர் குடியமர்த்தப்படவுள்ளனர்.

அபிவிருத்தித் திட்டங்களில் வேலை செய்வதற்கென சிங்களத் தொழிலாளர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அரச அலுவலங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கபட்டுவிட்டது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக ஒரு சிங்களவர் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எதிர்வரும் கல்வியாண்டில் சிங்ள மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்படும்போது வர்த்தக நிலையங்கள், சிங்களப் பாடசாலைகள், விகாரைகள் என்பன அமைக்கப்படும். அதில் பணிபுரிவதற்கென மேலும் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்படும். இதனடிப்படையில் மிகவிரைவில்  யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஏறத்தாழ 3 இலட்சம் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவர்.

1981ம் ஆண்டு எடுக்கப்பட்ட இறுதிக் குடிசன மதிப்பீட்டின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் மொத்த சனத்தொகை 9,07,741 பேர். இதில் 8,79,791 பேர் தமிழர்களாகவும், 16609 பேர் முஸ்லீம்களாவும் 10,049 பேர் சிங்களர்களாகவும் இருந்தனர். இதன்படி மொத்த சனத்தொகையில் 96.9 சதவீதத்தினர் தமிழர்களாயும் 1.8 சதவீதத்தினர் முஸ்லீம்களாயும் 1.1 சதவீதத்தினர் சிங்களவர்களாயும் இருந்தனர்.

தற்போது  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் மொத்த சனத்தொகை ஏறத்தாழ 8 இலட்சம் பேராக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. இதனோடு முன்னர் குறிப்பிட்டதுபோன்று 3 இலட்சம் சிங்களவர்கள் குடியமர்த்தப்படும்போது சனத்தொகை 11 – 12 இலட்சத்திற்கு இடைப்பட்டதாக அமையும். அவ்வாறாயின் மொத்த சனத்தொகையில் தமிழர்களின் பங்கு 97 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக வீழ்ச்சியடையும். மொத்த சனத்தொகையில் சிங்களவர்களின் பங்கு 1 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கும். இது மிக விரைவில் நடைபெறப்போகின்றது.
இதன்படி பார்த்தால் 2016ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின்போது யாழ் மாவட்டத்திலிருந்து குறைந்தது இரண்டு சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இம் முறைத் தேர்தலைப் போன்று தமிழ் மக்கள் வாக்களிப்பில் அக்கறையற்றிருந்தால் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை மேலும் அதிகரிக்கும். அண்மையில் யாழ்ப்பாணத்தில் 13ம் சரத்து மற்றும் மாகாண சபையின் அதிகாரங்கள் என்பன தொடர்பான கருத்தரங்கொன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண என்பவர் கிழக்கு மாகாணம் தொடர்பாக பின்வரும் கருத்தை முன்வைத்தார். ‘கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல. அங்கு பெருந்தொகையான சிங்கள மக்கள் வாழ்கின்றனர்.

அவர்கள் குடியேற்றப்பட்டவர்களா இல்லையா என்பதெல்லாம் தேவையற்றது. அவர்கள் இப்போது அங்கு வாழ்கி;ன்றனர் என்பது மட்டுமே உண்மை. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ இன்று கிழக்கு மாகாணத்தைப்பற்றிக் கூறப்படும் இக்கருத்து மிகவிரைவில் வட மாகாணத்திற்கும் பொருந்தும்.

தாயகத்தின் இன்றையநிலை இதுதான். இம் மக்களையும் மண்ணையும்  பாதுகாப்பதற்கு புலத்திலுள்ள தமிழர் அமைப்புக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? நிலமும் புலமும்  சேர்ந்து செயற்படுவதன் மூலம்தான் மக்களும் மண்ணும் பாதுகாக்கப்படும். எனவே இது தொடர்பான ஆரோக்கியமான கலந்துரையாடல்களை அங்கு மேற்கொள்ளுங்கள்.

தாயகத்தின் உண்மைநிலையை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அங்குள்ளவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள்தான் இவ் விடயத்தில் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யமுடியும். என்ன செய்யலாம் என்பதை நீங்களும் தாயகத்தில் உள்ளவர்களும் கலந்துரையாடி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்து அதனை செயற்படுத்துங்கள்.
இது உடனடியாகச் செய்யப்படவேண்டு;ம். இதை விடுத்து நீங்கள் ஆறுதலாகப் பேசி ஒரு முடிவிற்குவந்து ஏதாவது செய்வது என்ற தீர்மானத்திற்கு வரும்போது இங்கு மண்ணும் இருக்காது. மக்களும் இருக்கமாட்டார்கள்.

எதுஎவ்வாறாயினும் தாயகத்திலுள்ள தேசியத்தை நேசிக்கின்ற ஏனைய அமைப்புக்களோடாவது தொடர்பு கொண்டு எம் மக்களையும் மண்ணையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். இங்குள்ள தனி மனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவி புரிவதற்கு அப்பால் தாபனரீதியான அமைப்புக்களை இங்கு உருவாக்கி இப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாங்களே பங்குகொண்டு அபிவிருத்தியின் நன்மைகளையும் நாங்களே அனுபவிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுங்கள்.

நன்றி

– நன்றி: ஈழம் ஈ நியூஸ்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.