தனது பிடியில் இருந்து இலங்கை விலகிப் போவதை விரும்பாத அமெரிக்கா இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராகிறது?

போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை இலங்கைக்கு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை அமெரிக்கா எடுத்து பல வருடங்களாகி விட்டன. ஆனாலும் போருக்குப் பயன்படுத்தக் கூடிய கருவிகளை இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்கா வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

இலங்கை மீதான ஆயுத விநியோகத் தடை நடைமுறையில் இருந்த போது 1998ம் ஆண்டிலேயே அமெரிக்கா அதை மீறி AN/TPQ-36 எனப்படும் ரேடர் தொகுதிகளை அமெரிக்கா வழங்கியிருந்தது. இந்த ரேடர்கள் மோட்டார் அல்லது ஆட்டிலறிகள் ஏவும் இடத்தை துல்லியமாகக் கணிகக் கூடியவை. இதன் மூலம் மோட்டார் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களை சுலபமாக முறியடிக்க முடியும். முதலாவது சூடு நடத்தப்பட்டதும் இந்த ரேடர் அந்தக் குண்டு எங்கிருந்து சுடப்பட்டது என்பதைக் கண்டு பிடித்து விடும். இதன் மூலம் தாக்குதல் நடத்தும் மோட்டார் அல்லது ஆட்டிலறியை இனம்கண்டு முறியடிப்புத் தாக்குதலை நடத்த முடியும். ஒரே நேரத்தில் பத்து மோட்டார் நிலைகளை இந்தரேடர் அடையாளம் காட்டக் கூடியது. 18 கி.மீ தூரத்துக்குள்ளே இருந்து இயக்கப்படும் ஆட்டிலறிகளையும், 24 கி.மீற்றருக்குள்ளே இருந்து இயக்கப்படும் மோட்டார்களையும் இந்த ரேடர் கண்டுபிடித்துக் கொடுத்து விடும்.

ஜெயசிக்குறு சமர் வன்னியில் உக்கிரமடைந்திருந்த போது தான் இந்த ரேடர்களை இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா வழங்கியது. அப்போது இதைப் பயன்படுத்துவதற்கு இலங்கைப் படையினருக்கு சரியான பயிற்சி இருக்கவில்லை. கண்டபடி பயன்படுத்தி அதை அடிக்கடி பழுதாக்கி வந்தனர். அதைவிட புலிகளிடம் அப்போது குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டிலறிகளே இருந்தன. அவற்றை அடிக்கடி இடம் மாற்றி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் புலிகளின் ஆட்டிலறி, மோட்டார் தாக்குதல்களை முறியடிக்கின்ற திறனை இலங்கைப் படையினரால் பெற முடியாது போனது.

ஆனால்,

நான்காவது கட்டஈழப்போரில் இந்த ரேடர்கள் அரசபடையினருக்கு பெருத் துணையாக இருந்தன. புலிகளின் மோட்டார், ஆட்டிலறி நிலைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு முறியடிப்பதற்கு அவை வழிவகுத்தன. இலங்கைக்கு போர் ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற தீர்மானத்துக்கு முரணாக அமெரிககா வழங்கிய ரேடர்கள் , நான்காவது கட்ட ஈழப்போரில் முக்கிய பங்கு வகித்தன.

அந்த விவகாரம் அப்படியிருக்க,

இப்போது “றியல் ரைம் டேற்றா லிங் சிஸ்ரம் “ என்ற நவீன கண்காணிப்புத் தொகுதிகளை இலங்கை விமானப்படைக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த கண்காணிப்புக் கருவிகள் இலங்கை விமானப்படையின் வேவு விமானமான பீச் கிராப்ட்டில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பீச் கிராப்ட் விமானம் கூட அமெரிக்கத் தயாரிப்புத் தான். இரண்டு வேவு விமானங்களிலும் அமெரிக்கா பொருத்திக் கொடுத்துள்ள இந்தக் கண்காணிப்புக் கருவிகளின் பெறுமதி ஆறு மில்லியன் அமெரிக்க டொலராகும். அத்துடன் நிற்கவில்லை இன்னமும் இத்தகைய கருவிகளை அமெரிக்கா வழங்குவதற்கு இணங்கியுள்ளது. அதைவிட இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்குத் தேவையான வாகனங்களையும் அமெரிக்கா அண்மையில் வழங்கியுள்ளது.

போர் சாராத மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆயினும் இவையெல்லாம் போரில் பயன்படுத்தக் கூடியவை தான்.

போர் முடிந்து விட்டதால் இதுபற்றிய சர்ச்சைகள் இப்போது எழவில்லை.

எனினும் இந்தக் கருவிகளின் வழங்கலின் மூலம் அமெரிக்கா மெல்ல மெல்ல இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளையும் செய்யத் தயாராகிறது என்ற உண்மை வெளியே வந்திருக்கிறது. அதாவது அமெரிக்கா இலங்கையுடன் நெருக்கமான இராணுவ உறவுகளைப் பேணிக் கொள்ள விரும்புகிறது. இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முனைந்து கொண்டிருக்கும் கட்டத்தில் அமெரிக்கா வெறும் பார்வையாளனாக இருக்க விரும்பவில்லை.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவமும் அதன் மீதான பிற நாடுகளின் கவனிப்பும் அமெரிக்காவை சற்று மிரளவே வைத்துள்ளது.

இதனால் தான் எவ்வளவு அரசியல் இராஜதந்திர ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளை இலங்கைக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அண்மையில் கூட அமெரிக்காவின் 40 படையினர் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்காக வந்திருந்தனர். அதற்கு முன்னர் அமெரிக்கப் போர்க்கப்பலான “பேர்ள் ஹாபர்“ திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சில நாட்கள் தரித்து நின்றது. அதைவிட போரின் முடிவுக்குப் பிறகு இலங்கை முக்கியமானதொரு இடமாக மாறியுள்ளது.

இலங்கைக் கடற்படையிடம் இருந்து சில போர் தொடர்பான உத்திகளைக் கற்றுக் கொள்ள பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன. இதற்காகவே போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 15 மாதங்களில் பெருமளவிலான வெளிநாட்டுப் போர்க் கப்பல்கள் இலங்கைக்குப் படையெடுத்து வந்திருந்தன.

  • தென்கொரியாவின் மூன்று போர்க்கப்பல்கள், இந்தியாவின் எட்டுப் போர்க்கப்பல்கள், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவின் தலா இரு கப்பல்கள், அவுஸ்ரேலியா, ரஷ்யா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தலா ஒரு போர்க்கப்பல் என்று இந்தக் காலப்பகுதியில் மொத்தம் 18 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை இலங்கைக் கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு விட்டே திரும்பிச் சென்றன. வல்லரசு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் கூட, இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள விரும்புகின்ற நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் தனது பிடியில் இருந்து இலங்கை விலகிப் போவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. இதற்காக அவ்வப்போது சில போர்க் கருவிகளைக் கொடுத்து இலங்கை அரசை தன் பக்கத்தில் அமர வைக்கப் பார்க்கிறது.

தற்போது இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகள் கடல்சார் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும், தரையில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் பெரிதும் பயன்படக் கூடியவை. கடல்சார் பாதுகாப்பு விவகாரம் என்பது இப்போது மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக மாறிவருகிறது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இதன் தேவை அதிகம். அதனால் அண்மையில் காலியில் நடத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்காவே அதிக பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது.

இப்போது இலங்கைக்கு அது தொடர்பான கருவிகளைக் கொடுத்திருக்கிறது. இந்தக் கருவிகள் போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை விமானப்படைக்குக் கிடைத்திருந்தால் அது இன்னும் துல்லிமான தகவல்களை அவர்கள் பெறுவதற்கு உதவியிருக்கும். போர்முடிவுற்ற நிலையில் விமானப்படைக்கு இவை கிடைத்திருப்பது ஆறுதல் பரிசு தான்.

அதேவேளை, போர்க்கருவிகளை இலங்கைக்கு விற்பதில்லை என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டின் உறுதித் தன்மை தற்போது குறையத் தொடங்கியிருப்பதையும் இது வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.

– சுபத்ரா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.