“சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி” என்கிறார் மஹிந்த!

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;

எமது கட்சி வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை அமைக்கவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ இல்லை.

நாம் சூழ்ச்சிகளில் ஈடுபடாவிட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக எப்போதும் சூழ்ச்சிகள் இருந்தே வந்துள்ளன. 1962 ஆம் ஆண்டு இராணுவ சூழ்ச்சி, 1964 ஆம் ஆண்டு பத்திரிகை சட்டமூலம் போன்ற சூழ்ச்சிகளுக்கு சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இன்றும் அந்த சூழ்ச்சி தொடர்ச்சியாக எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அன்று பத்திரிகைச் சட்டமூலம் கொண்டு வந்தபோது அதற்கு தொடர்புபட்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சியில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் இன்றும் அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்கின்றனர்.

இது பற்றி நாம் புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும். இதேநேரம் தற்போதிருக்கும் அரசியலமைப்பின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்றார்கள். எனினும் இன்று அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆசியாவிலேயே பலம்வாய்ந்த அரசாக விளங்க இந்த கட்சிக்கு முடிந்துள்ளது.

தற்போதிருக்கும் அரசியலமைப்பின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது போகுமென அரசியலமைப்பு நிபுணர்கள் அன்று கருதினர். எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று கட்சியை பலமிக்கதாக கட்டியெழுப்ப எமக்கு முடிந்துள்ளது.

இது சூரியனும் நிலவும் இருக்கும் வரையில் இருக்க வேண்டிய அரசியலமைப்பல்ல. நாட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அது மாறவேண்டும். அபிவிருத்தி மற்றும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றுக்காக மாற வேண்டும். மக்களின் இறைமையைப் பலப்படுத்தும் அரசியலமைப்பாக இருக்க வேண்டும். இதற்கமைய இவை மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது.

நாம் இன்று அரசியலமைப்பொன்றை மக்கள் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். இது மக்கள் மய அரசியலமைப்பு. எதிர்வரும் 8 ஆம் திகதி இதை (பாராளுமன்றத்தில்) நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்திக்காகவுமே இந்த அரசியலமைப்பு (திருத்தம்) கொண்டு வரப்படுகிறது.

6 வருட பதவிக்காலத்தை 12 வருடங்களாக்கிக் கொள்வதற்காக இதை நிறைவேற்றவில்லை. ஏனெனில் இப்படித்தான் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த அரசியலமைப்புத் திருத்தமானது எனது பதவிக் காலத்தை நீடிக்கும் ஒன்றல்ல. அது தவறு. இதன் மூலம் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமே வழங்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் பற்றி அரசியலமைப்பின் 92 ஆவது சரத்தில் குறிப்பிடப்படுகிறது. மனநோயாளி, இலஞ்சம் பெற்றோர், வங்குரோத்துக்காரர்கள் போன்றோர் தகுதியற்றவர்கள் என இதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

இருமுறை மக்களின் வாக்குகளால் தெரிவான ஒருவரும் இவர்களில் ஒருவராக இருக்க முடியாது. எனவே மக்கள் இதில் தீர்மானிப்பர். அவர்களுக்கு தேவையென்றால் தெரிவு செய்வார்கள். அதற்கு முன்னதாக யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதைக் கட்சியே தீர்மானிக்கும்.

பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அம்மூவரும் பிரதிநிதித்துவப்படுத்தாத தமிழ் அல்லது முஸ்லிம் இன பிரதிநிதிகள் இருவர் ஆகியோரைக் கொண்ட பாராளுமன்ற பேரவை கொண்டு வரப்படுகிறது.

பாராளுமன்றம் உயரிய ஸ்தானம் என்பதாலேயே மக்கள் பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைத் தருகின்றனர். எனவே, இங்கு கூறப்படும் ஆபத்து எதுவும் இதில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். எமக்கு தனித்து அரசியல் செய்ய முடியாது.

இடதுசாரி அரசியல் கட்சிகள் எப்போதும் எம்முடன் இருந்தன. எமது அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டு அந்தந்த கட்சிகளினதும் அடையாளங்களையும் பாதுகாத்து எமது கட்சியினுள் ஒன்றுபட்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்ற நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நாம் அனைத்துக் கட்சிகளுடனும் சகவாழ்வுடன் செயலாற்ற முடிந்திருக்க வேண்டும். நாம் இன்று இலங்கையில் பலமிக்க அரசியல் கட்சி என்பதற்காக சிறு அரசியல் கட்சிகளை அற்பமாகக் கருதி நாம் ஒருபோதும் செயற்பட முடியாது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.