சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன், புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.சி. சக்தி, வெ. சேகர்,  இலங்கை தமிழ் எழுத்தாளர் எஸ்பொ,  கவிஞர் காசி ஆனந்தன், எழுத்தாளர்கள் தாமரை, பா. செயப்பிரகாசம் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக செய்தியாளர் சந்திபொன்றை நடத்தினர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் 2011 ஜனவரி 5, 6,7,8 திகதிகளில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த இருப்பதாக சிவத்தம்பி உள்ளிட்ட சிலர் அறிவித்துள்ளனர். ஈழத் தமிழர்கள் மிகவும் துயரத்தில் இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த மாநாடு தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயனைத் தராது.
 
தமிழகத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ஈழம் பற்றிய செய்தியை வெட்டிய பிறகுதான் இலங்கையில் விற்க முடிகிறது. இதுபோன்ற மோசமான நிலையில் நடைபெறும் மாநாட்டில் ஈழத்தில் நடந்த பேரழிவு குறித்து பேசுவது சாத்தியமல்ல.தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு தனது கோர முகத்தை மறைப்பதற்காக, இதுபோன்ற மாநாட்டை தமிழ் எழுத்தாளர்களின் போர்வையில் நடத்த முயற்சிக்கிறது.

நாடு, மொழி, இன வரம்பு கடந்து மானுடத்தை நேசிக்கும் படைப்பாளிகள் கொழும்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.