இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் ‐ ரணில் விக்கிரமசிங்க

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இருந்து சென்னை சென்ற எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி:‐ இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவின் இலங்கை சுற்றுப்பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன?
 
பதில்:‐ நிருபமாராவ் 3 நாள் பயணமாக இலங்கை வந்தார். இலங்கையில் தமிழர்கள் முகாம், அவர்கள் வாழ்கின்ற பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் இலங்கை ஆட்சியாளர்களை சந்தித்து பேசினார். இது பற்றி இந்திய பிரதமரிடம் அறிக்கை தருவார். அந்த அறிக்கையில் என்ன உள்ளது என அறிந்தபின் கருத்து தெரிவிக்கிறேன்.
 
கேள்வி:‐ இலங்கையில் தமிழர்களை மறுகுடி அமர்த்துவது எந்த நிலையில் உள்ளது?

பதில்:‐ இலங்கையில் தமிழர்களை மறுகுடி அமர்த்தும் பணி முழு திருப்தியாக இல்லை. இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். தமிழர்கள் அதிகமாக உள்ள வடகிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்காமல் செயல்படுவதால் தமிழர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீராமல் உள்ளன.
 
கேள்வி:‐ இலங்கைக்கு இந்தியா நிதிஉதவி அளிப்பது பற்றி?

பதில்:‐ இலங்கையில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி அளிப்பது பாராட்டத்தக்கது. மறுவாழ்வு புனரமைப்பு பணிக்காக தாராளமாக இந்தியா உதவி வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் உணவு, உடை உள்பட பல பணிகள் செய்யப்படுகின்றன. இந்தியா அவர்களின் உயர் கல்வி, மருத்துவம் போன்றவற்றிக்கு கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் என ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.