முதல்நிலைப் பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்துகிறது சிறிலங்கா – முள்ளிக்குளத்தில் பிராந்திய கடற்படைத் தலைமையகம் திறப்பு

கடந்த காலத்தில் நாட்டைச் சுற்றி சரியான பாதுகாப்பு தளங்களை அமைக்கத் தவறியதாலேயே, இராணுவத்தை விடவும் அதிகமான ஆயுதங்களை தீவிரவாதிகளால் குவிக்க முடிந்தது என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்னார், முள்ளிக்குளத்தில் நேற்று சிறிலங்கா கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச,

“அவர்கள் தமக்கான அனைத்தையும் கடல் வழியாகவே கடத்தி வந்தனர்.

எனவே தான் அரசாங்கம் முள்ளிக்குளம் போன்ற முக்கியமான இடங்களில் படைத்தளங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதேபோன்ற மற்றொரு பாதுகாப்புத் தளம் முல்லைத்தீவில் எற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

தீவு நாடான சிறிலங்காவுக்கு கடற்படையே மிகவும் முக்கியமான பாதுகாப்புக் கவசமாகும்.

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிராந்தியக் கடற்படைத் தலைமையகம் முக்கியமான பங்கை வகிக்கப் போகிறது.

நாட்டின் முதல்நிலைப் பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்தும் திட்டத்தை நோக்கிய முதலாவது கட்ட நடவடிக்கை இது“ என்று குறிப்பிட்டார்.

முன்னதாக அவர் வடமேல் கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தை முள்ளிக்குளத்தில் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முப்படைகளினதும் தளபதிகள் உள்ளிட்ட படையதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக நிறுவப்பட்டுள்ள வடமேல் கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தின் பாதுகாப்பின் கீழ் புத்தளம் தொடக்கம் மன்னாரின் அரிப்பு வரையிலான கரையோரப் பிரதேசம் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் புத்தளத்தில் உள்ள “தம்பபன்னி“, கற்பிட்டியில் உள்ள “விஜய“, முள்ளிக்குளத்தில் உள்ள “பரண“, சிலாவத்துறையில் உள்ள “தேரபுத்தா“ ஆகிய கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.