அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என உடுப்பிட்டி மீள்குடியேற்ற மக்கள் அதிருப்தி

அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என உடுப்பிட்டிப் பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
 
சுமார் ஒரு வருட காலமாக இடம்பெயர் முகாமில் தங்கியிருந்து ஐந்து மாதங்களுக்கு முன்னர் உடுப்பிட்டியில் மீள் குடியேற்றப்பட்டதாகவும், அரசாங்கத்தினால் தமக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பிரதி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அண்மையில் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த போது பிரதேச மக்கள் இந்த முறைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.
 
இராணுவத்தினரைத் தவிர்ந்த வேறு எந்த அரசாங்க அதிகாரிகளும் தமக்கு உதவிகளை வழங்கவில்லை எனவும், மீள் குடியேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தமது கிராமத்திற்கு விஜயம் செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
தமது வீடுகள் பழுதடைந்துள்ளதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவிகள் வழங்கப்பட வேண்டுமென மக்கள் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.