“சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி சட்டவிரோதமானது” – மங்கள சமரவீர!

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் கால தேர்தல் தொடர்பான மனு தற்போதும் தீர்வுக்காக நிலுவையாக இருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்கால வரையறையை அகற்றுவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியானது சட்டவிரோதமானது என்றும் தார்மீகக் கோட்பாடற்றது என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கான பிரசாரத்தை ஜனாதிபதியும் அரசாங்கமும் நடத்திய வேளையில் ஜனாதிபதிப் பதவி தொடர்பான வரையறை அகற்றப்படும் என்று ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மக்களுக்கு உறுதியளித்திருக்கவில்லை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

அத்தகைய உறுதிமொழி எதுவும் அளிக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்குமாறும் அரசுக்கு அவர் சவால் விடுத்தார்.

புதிய அரசியலமைப்புக்கோ அல்லது ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்கவோ நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. புதிய திருத்தங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

சில எம்.பி.க்கள் தனிப்பட்ட சிறப்புரிமைகளுக்காக கட்சி தாவிக்கொண்டிருக்கின்றனர். சர்வாதிகாரத்தனமான பாதைக்கு எதிராக அதிருப்தி கொண்டவர்கள் அரசாங்கத்திற்குள்ளும் இருக்கின்றனர்.

ஆனால், தமது அபிப்பிராயத்திற்காக எழுந்து நிற்கும் முதுகு எலும்பு அவர்களுக்கு இல்லை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். சர்வாதிகார போக்குக்கு குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.

தேர்தலின் போது ஜனாதிபதி பதவிக்காலத்தை வரையறையற்றதாக்குவது மற்றும் 17 ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிப்பது குறித்து பிரசாரக் கூட்டங்களில் பேசவில்லை. பேசியிருந்தால் எங்கென தெரிவிக்குமாறு சவால் விடுக்கின்றேன்.

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியான சாவேஸ் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்து பணம் வழங்கி எதிர்க்கட்சியிலுள்ளவர்களை வாங்கியும் அழுத்தம் கொடுத்தும் செய்ய முற்படவில்லை.

மாறாக இரு தடவைகளுக்கு மேல்போட்டியிடுவது குறித்து மக்கள் விருப்பத்தை அறியுமுகமாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார்.

மக்கள் அதனை ஏற்கவில்லை.மக்களின் கருத்துக்கு மதிப்பளித்தார். ஆனால், இங்கோ மக்கள் ஆணையை மீறி பலாத்காரமாக பாராளுமன்றத்தின் 2/3 பலத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 42% வாக்குகளை மக்கள் அளித்தனர். இந்நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாலானவர்கள் தமது எதிர்ப்பினை காண்பிக்குமுகமாக வாக்களிக்காத நிலையில் வாக்களித்த தொகையில் 1/3 பகுதியைக் கொண்டே அரசு பெரும்பான்மை பலத்தைப் பெற்றது.

அரச பலம், வளம் என்பவற்றை பாவித்தும் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தியும் 2/3 பெரும்பான்மை வாக்குகள் பெறாத நிலையில் இதனை செய்வது ஏற்கமுடியாது.

இந்நிலையில் அரசு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெறுவதற்காகக் கட்சியை உடைக்கப்போவதாக அச்சுறுத்தியும் சகோதரர்களை மோதவிட்டும் உள்ளது.

ஆனால், 2/3 பகுதி மக்கள் எமது கட்சியின் நிலைப்பாட்டில் உள்ளனரென நம்புகின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மகாநாட்டில் அரசியலமைப்பு திருத்தத்துக்கு கையுயர்த்திய போதிலும் பலருக்கு விருப்பமில்லையென்பது எனக்குத் தெரியும். அக்கட்சியிலுள்ளவர்கள் ஐ.தே.க. இதனை செய்யவிடக்கூடாது எனத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர்.

சந்திரிகா குமாரதுங்கவின் படம் கட்சி மகாநாட்டில் அகற்றப்பட்டுள்ளது. இது கட்சி வரலாற்றை திரிவுபடுத்தும் செயலாகும். 2005 சுதந்திர கட்சியுடன் ஜே.வி.பி.முக்கிய பணியாற்றி வெற்றிக்குக் காரணமாயிருந்தது.

பின் நான் பிரசார முகாமையாளராகவும் இணைப்பாளராகவும் இருந்தேன்.எமக்கு என்ன நடந்தது. எல்லோருக்கும் இது தெரியும்.

பயங்கரவாதத்தை அழிக்க தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவின் பதவியை இல்லாமல் செய்ததுடன், அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். ஆனால், கே.பி., மேர்வின் போன்றவர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.

இந்நிலையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்து உண்மையை வெளிப்படுத்தாது வாக்களித்த மக்களை ஏமாற்றி மேற்கொள்ளும் நடவடிக்கையை கட்சி பேதமின்றி ஐக்கிய தேசிய கட்சியுடன் ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபடுமாறு கோருகிறேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிரேஷ்ட தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியிலுள்ளவர்களாக இருக்கின்ற போதும் இதன் மூலம் அதிகாரம் கொடுக்கப்படமாட்டாது.

இதேபோல் தற்போது மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுவின் அதிகாரம் கையிலெடுக்கப்படுகின்றது. இது சர்வாதிகார போக்குக்கு அத்திபாரமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.