“விசேட தூதர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறது இந்தியா” – “ரைம்ஸ் ஒப் இந்தியா”

இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

முக்கியமாக அயல் நாடான இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் நிரந்தரமான நிலைப்பாட்டைப் பேணிக் கடைப்பிடிப்பதற்காக விசேட தூதுவர் ஒருவரை வைத்திருப்பது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக “ரைம்ஸ் ஒவ் இந்தியா” நேற்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் நிலைவரத்தை நேரடியாக ஆராய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரும் சாத்தியமிருப்பதாக இந்திய அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்து அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கிருஷ்ணா இலங்கைத் தலைமைத்துவத்திற்கு வலியுறுத்தல் விடுப்பார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கலந்துரையாடலை நடத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இதய சுத்தியுடனான தலைமைத்துவம் குறைவாக இருப்பதால் அரசியல் தீர்வுக்காண விடயங்கள் தாமதமாகி வருகின்றது என்ற கருத்தை கொழும்பிலுள்ள தலைமைத்துவம் தொடர்ந்தும் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் முன்னர் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்துவதற்கு விரும்பவில்லையென புதுடில்லிக்கு இலங்கை அரசு கூறியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.