“சிங்களவரின் அத்துமீறிய விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன” – அரியநேத்திரன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி நிலங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால், அதன் பின்னர் ஏற்படும் விபரீதங்களையிட்டுக் கவலை கொள்வதில் பலனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துமீறி இவ்வாறான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் தமது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாமல் போய்விடும் என கால்நடை வளர்ப்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி நிலங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறையிட்டதனைத் தொடர்ந்தே மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

படுவான்கரையின் பட்டிப்பளை மற்றும்; வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சல் நிலத்துக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலப்பரப்பில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் காத்தாடியார் சேனையில் 579 ஹெக்டயர், தாளையடி மடுவில் 555 ஹெக்டயர், கெவுளியாமடுவில் 58 ஹெக்டயர், பொன்னாங்கேணிச் சேனையில் 291 ஹெக்டயர் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு பெருவெட்டையில் 500 ஹெக்டயர் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்பகுதிகளில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து விவசாய நடவடிக்கைகளினை ஆரம்பித்துள்ளனர்.

இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் விபரீதங்களுக்கு கவலை கொள்வதில் பலனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த மேய்ச்சல் நிலப்பரப்புகளில் வளர்க்கப்படும் மாடுகள் இதற்கு முன்னர் உன்னிச்சைக் குளத்தையண்டிய பிரதேசத்தில் வளர்க்கப்பட்டவை.

அங்கு குடிநீர்த்திட்ட வேலைகள் நடைபெற்று வருவதனால் இப்பிரதேசத்தினை மேய்ச்சல் நிலமாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

படுவான்கரை பிரதேசமே மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பால் உற்பத்தியை நிறைவு செய்யும் பிரதேசமாகும். இவ்வாறான அத்துமீறிய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தமக்கு இந்த அத்துமீறிய விவசாய முயற்சிகள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், வர்த்தமானி அறிவித்தலின் படி எல்லைகள் போடப்பட்ட பிரதேசங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சட்ட நடிவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதேச செயலாளர்கள் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் தமக்கு அறிக்கை கிடைத்துவுடன் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.