வேலும் மயிலும் மனோகரன் மயிலாட்டம்! GTV பிறேம் ஒயிலாட்டம்!

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக ஒருகாலத்தில் இருந்தவர் வேலும் மயிலும் மனோகரன். ஆனால் அவர் தேசிய தலைவரால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது யாவரும் அறிந்த விடயம். தற்சமயம் பிரான்சில் வசித்துவரும் இவர் GTV தொலைக்காட்சிக்கு நீண்ட நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். இவர் தனது கருத்துக்களை சொல்ல GTV களம் அமைத்துக் கொடுத்துள்ளதை பல தமிழின உணர்வாளர்கள் கண்டித்துள்ளனர்.

தனி மனிதர் ஒருவர் தனது கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக சொல்வதில் தவறில்லை. யாரும் எக் கருத்துக்களையும் கூறலாம். ஆனால் தமிழ்த்தேசியம், இறையாண்மை பற்றிப் பேசுவோர், விடுதலை மற்றும் போராட்டம் பற்றிப் பேசுவோரை நேர்காணல் செய்வதை வெகுவாகக் குறைத்துக் கொண்ட இத் தொலைக்காட்சி மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை அதிகம் நேர்காண்பது ஏன்?

கே.பியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் பிழையான வழியில் செல்வதாக பெரும்பாலான மக்கள் எண்ணிவரும் நிலையில், அதனை பிரதிபலிப்பது போல இத் தொலைக்காட்சி சில செய்திகளை வெளியிடுவதும், பின்னர் அவருக்கு ஆதரவான சிலரை அழைத்து நேர்காணல் நடத்துவதும் ஒரு பிழைப்புவாதமாகப் போயுள்ளது. அதே வரிசையில் வேலும் மயிலும் மனோகரனை பேட்டி எடுத்து அதில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளைக் கேட்டுள்ளார் பிறேம். ஏற்கனவே அரசியல் அனுபவமோ, எவ்வாறு மற்றவர்களோடு உரையாடுவதோ என்று சற்றும் தெரியாத வேலும் மயிலும் மனோகரனிடம் மோட்டுத்தனமான கேள்விகளைத் தொடுத்துளார் பிறேம்!

அவர் முதலாவாதாகக் கேட்டுள்ள கேள்வி, முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், இலங்கை விடயம் தொடர்பாக ஒரு “”சலசலப்பும்”” ஒரு சுவாரஸ்யமும் இருப்பதாக பிறேம் கூறுகிறார், ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டதும், லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, மேலும் பலர் அங்கவீனமாக இருப்பதும் ஒரு சுவாரஸ்யமான விடயமாகப் படுகிறது திரு பிறேம் அவர்களுக்கு. தாம் என்ன கேட்கிறோம் என்பதை புரியாமல் திரு பிறேம் அவர்கள் கேள்விகேட்க, தாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல், வேலும் மயிலும் பதிலளிப்பது, வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் போர் ஓய்ந்துவிட்டதாகவும், தமிழீழம் இனி எட்டாத கனி எனவும், இலங்கை அரசோடு சேர்ந்தே இயங்குவது நல்லது எனவும் வேலும் மயிலும் கூற, அதை எதிர்ப்பதுபோல, ஒரு ஊடல் நாடகம் நடத்தி பின்னர் அவர் கூறுவது சரி என்பதுபோல தனது நேர்காணலை முடித்துள்ளார் பிறேம்! கே.பி மணம் முடித்த பெண் ஒரு பௌத்தர் எனவும் அதனால் அவர் சாத்வீகவாதியாக இருப்பார் என்றும் எதிர்வு கூறுகிறார் மனோகரன். இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குவது என்று ஏற்கனவே முடிவு எடுத்து, அதையே தற்போது செய்துவரும் இவர் போன்றோரைப் பேட்டி எடுப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு GTV பிறேம் என்ன செய்தியைச் சொல்ல வருகிறார், என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படவேண்டும் என்கிறாரா?

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளது, இன அழிப்பு நடைபெற்றுள்ளது, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் பல நடந்துள்ளன, தமிழர் பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன, இதனை எல்லாம் விடுத்து வேலும் மயிலும் என்னும் ஒரு கோமாளியை அழைத்து அவரை நேர்காணல் கண்டு மக்களுக்கு புத்தி சொல்லவேண்டிய நிலையில் புலம்பெயர் தமிழ் மக்கள் இல்லை. தமிழர்கள் எப்போதுமே தெளிவாகவும் தமது கொள்கைகளில் உறுதியாகவுமே உள்ளனர், இவர்களைப் போன்ற சிலரே திரும்பத் திரும்ப மக்களைக் குழப்பி வருகின்றனர். இவர்களைப் போன்றோர் வெறுமனவே தொலைக்காட்சிகளில் தோன்றி தமது கருத்துக்களைத் தெரிவிப்பதை முதலில் நிறுத்தி, தாம் ஒரு திட்டத்தை நிறைவேற்ற நினைத்தால் அதனை முதலில் நிறைவேற்றிவிட்டு வந்து நேர்காணல்களைக் கொடுக்கட்டும், வெறுமனவே தொலைக்காட்சியில் தோன்றி தமது கருத்துக்களை தெரிவிப்பதும், பின்னர் பணம் சேகரித்து, அரச கஜானாவை நிரப்புவதுமே இவர்கள் குலத்தொழிலாகக் கொண்டுள்ளனர்.

குரைக்கும் நாய் கடிக்காது, கடிக்கும் நாய் பெரிதாகக் குரைக்காது தனது வேலையைச் செய்யும்.

எமக்குத் தேவை செயல் வீரர்களே!! வாய்ச்சொல் வீரர்கள் அல்ல!!!

நன்றி: அதிர்வு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.