உத்தேச அரசியலமைப்பு திருத்தம்: தமிழ் கூட்டமைப்பின் முடிவு திங்களன்று!

உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் ஆறாம் திகதி திங்கட்கிழமை கூடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என மாவை. சேனாதிராஜா கூறியுள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் எவ்வாறாயினும் அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான தீர்மானம் ஒன்றை இன்னும் மேற்கொள்ளாததால் அது குறித்து மேலதிக மான எதனையும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் அரசியல் அமைப்புத் திருத்த சட்டமூலத்தை எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஏக மனதான தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஆளும் கட்சியின் கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் முறை சீர்திருத்தம் உள்ளிட்ட மேலும் சில அரசியல் அமைப்புத் திருத்தங்கள் வரும் காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் எதிர்காலத்தில் சட்டத்தினால் மாற்றம் ஏற்படக் கூடிய வேலைத் திட்டங்களையும் அரசாங்கம் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் 8 ஆம் திகதி உத்தேச அரசியல் அமைப்புத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மக்களுக்காகப் பயன்படுத்த அரசாங்கம் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.