தமிழர்களுக்கு மிகப் பரந்த மனதுடன் சிங்களவர்கள் உதவ வேண்டும் – இந்திய இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது வாழ்வை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்காவுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜெனரல் விஜய்குமார் சிங் புதுடெல்லியில் அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“போர் நடைபெற்ற காலங்களில் இருந்த எல்லாப் பகையுணர்வையும் காயங்களையும் சிறிலங்காவைச் சேர்ந்த அனைவரும் இப்போது புதைத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழ்ச் சகோதரர்கள் போரினால் இழந்து போன வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகவும் பரந்த மனதுடன் உதவ வேண்டும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிர்காலம் மிகவும் நல்லதாக உள்ளது.

எனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல.

ஏற்கனவே இருநாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் எத்தகைய கட்டமைப்பு உள்ளது என்பது பற்றியும் பார்க்க வேண்டியுள்ளது.

எத்தகைய பாதுகாப்பு உறவு பேணப்படவுள்ளது என்பது பற்றி இருநாட்டு அரசியல் தலைவர்களும் தான் தீர்மானிப்பர்“ என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் இரண்டு வருடங்கள் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர்.

திருகோணமலையில் கப்பல் மூலம் ஒரு மேஜர் தர அதிகாரியாக வந்து இறங்கிய அவர், புலிகளுக்கு எதிராக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்.

இவர் சிறிலங்காவில் இருந்து திரும்பிச் சென்றபோது லெப்.கேணல் தரத்துக்கு பதவி உயர்வு பெற்றிருந்தார்.

சிறிலங்காவில் பணியாற்றிய காலத்தில் கற்றுக்கொண்ட சில சிங்களச் சொற்களை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.

இந்தச் செவ்வியின் போது அவர் சிங்களச் சொற்களையும் அவற்றின் அர்த்தத்தையும் செய்தியாளருக்குக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.