தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 508 பேர் விடுதலை

சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 508 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று பம்பைமடு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜிதமுனி சொய்சா இதில் கலந்துகொண்டு விடுதலை செய்யப்பட்டவர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் 246 பேர் அண்மையில் இடம்பெற்ற சிறிலங்காவின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் என்பதும் ஏனையோரில், மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் மணம் முடித்து வைக்கப்பட்ட 50 தம்பதிகளும் அடங்குவார்கள்.

இதேவேளை, இராணுவத்தினரிடம் சரணடைந்த 11 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் மேலும் 7500 பேர் இராணுவத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் குற்றச்செயல்கள் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் ஏனையோர் படிப்படியாக விடுதலை செய்யப்படுவர் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.