“அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளும்” – புத்திஜீவிகள் ஒன்றியம்!

உத்தேச 18ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டின் ஜனநாயகத்தை பாரதூரமான ஆபத்தில் தள்ளும் நடவடிக்கை எனவும் நாட்டை சர்வாதிகார நிர்வாகத்திற்குள் உட்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 17ஆவது அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட உள்ளதுடன் அதன் அதிகாரங்கள் ஜனாதிபதி தலைமையிலான குழுவிடம் வரையறுக்கப்படவுள்ளன.

குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பதானது 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படை நோக்கத்தை மீறுவதாகும்.

அத்துடன் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆளும் கட்சியின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

அதீதமான அதிகாரங்களை கொண்டுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரின் கீழ் செயற்படும் அமைச்சரவை என்பது பொம்மைகளை போன்ற அமைச்சர்களை கொண்ட ஒரு நிறுவனம் என்பது இரகசியமான விடயமல்ல.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் இந்த நிலைமை தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.

இந்த நிலையில் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பொலிஸ் மற்றும் அரச சேவை ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளுக்கே செல்லும்.

இந்த நிலைமையானது மக்களின் உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.

சுயாதீனமான பொலிஸ் மற்றும் அரச சேவை கள் இல்லாத இந்த நாட்டில் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த முடியாது.

அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களும் மோசடியானதும், நீதியற்றது மான தேர்தல்களாகும். அவற்றில் மக்களின் உண்மையாக நிலைப்பாடுகள் பிரதிபலிக்கவில்லை.

17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தாது அரசாங்கம் மேற்கொள்ள போகும் அரசியலமைப்புத் திருத்தங்களால் நிலைமை மேலும் மோசமடையும்.

அத்துடன் மக்களின் வாக்குரிமைகளும் மீறப்படும் தனி நபர் ஒருவரின் அதிகார தேவை களுக்காக கொண்டு வரப்படும் அரசியலமைப்புத் திருத்தங்களை ஜனநாயகத்தை மதிக் கும் சகல மக்களும் கண்டிக்க வேண்டும்.

இவ்வாறான குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களில் அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.